தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக்குகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,144 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:கடந்த 4 ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 11 பாலிடெக்னிக்குகள், 24 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 14 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதோடு, 959 புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.
மாணவ, மாணவியருக்குத் தரமான கல்வியை வழங்கும்பொருட்டு, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், அரசு பாலிடெக்னிக்குகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள் என மொத்தம் 1,144 உதவிப் பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.
அண்ணா பல்கலைக்கழக உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ.252 கோடி: பல்கலைக்கழகத் துறைகளை உள்ளடக்கிய 4 வளாகங்களையும், 13 உறுப்புக் கல்லூரிகளையும், 4 மண்டல அலுவலகங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல், பொறியியல் சார்ந்த துறைகள் மிகச் சிறப்பு வாய்ந்த வளர்ச்சி நிலைக்கு உயர்த்தப்படும். விடுதிகள், போக்குவரத்து வசதிகள், மைய நூலகங்கள், கணினி மையங்கள், சூரிய ஒளியில் இருந்து ஆற்றல் உருவாக்கும் அமைப்புகள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.252 கோடியே 60 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.
அன்னை தெரசா மகளிர் பல்லைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.60 கோடியில் மேம்படுத்தப்படும்.அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.62 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நிதியின் மூலம் கல்வி, நிர்வாகக் கட்டடங்கள், வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வுக் கூடங்கள், கழிப்பறைகள் ஆகியவை கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள், 5 பாலிடெக்னிக்குகள்
புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள், 5 பாலிடெக்னிக்குகள் தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 1957-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரி ஏதும் தொடங்கப்படவில்லை. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மூலம் 5 உறுப்புக் கல்வியியல் கல்லூரிகள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும். பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் தொழில்நுட்பக் கல்வியையும், வேலைவாய்ப்பையும் பெற 5 புதிய அரசு பாலிடெக்னிக்குகள் ரூ.150 கோடியில் தொடங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment