திருவள்ளுவர் பல்கலையின் கீழ் இயங்கும், கல்லுாரிகளில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில், 2,270 பேர், பல்கலையின் ஒப்புதல் பெற, விண்ணப்பம் அளிக்கவில்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பல்கலைக்கழக மானிய குழுவான - யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. வேலுார், திருநகரைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற இணை பேராசிரியர் இளங்கோவன் தாக்கல் செய்த மனு:
வேலுாரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில், இணைப்பு மற்றும் அங்கீகாரம் பெற்ற, 112 கல்லுாரிகள், ஆறு உறுப்பு கல்லுாரிகள், ஏழு முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறைகள் உள்ளன. கல்லுாரி ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதியை, யு.ஜி.சி., நிர்ணயித்துள்ளது. திருவள்ளுவர் பல்கலை கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லுாரிகளில் நியமிக்கப்பட்டுள்ள, 5,000 ஆசிரியர்களில், யு.ஜி.சி., விதிமுறைகளின்படி தகுதி பெற்றவர்கள், கால் பங்கு தான் இருக்கும்.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த, பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில், கல்வித் தகுதியை பூர்த்தி செய்ய, ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்குவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம், யு.ஜி.சி., விதிமுறைகளுக்கும், உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கும் முரணானது. எனவே, இந்த தீர்மானத்துக்கு, தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க, குழு ஒன்றை நியமிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, யு.ஜி.சி., துணை தலைவர் தேவராஜ் உட்பட, ஐந்து பேர் குழு நியமிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யு.ஜி.சி., சார்பு செயலர் சதீஷ்குமார், தாக்கல் செய்த மனு:
கல்லுாரி வாரியாக, ஆசிரியர்களின் விவரங்கள், யு.ஜி.சி.,க்கு அளிக்கப்பட்டது. அதில் இருந்த, 4,240 ஆசிரியர்களில், பல்கலை கழகத்தின் ஒப்புதலுக்கு, 1,970 பேர் தான் விண்ணப்பித்துள்ளனர்; மீதி, 2,270 ஆசிரியர்கள் இன்னும் விண்ணப்பிக்கவில்லை. ஆசிரியர் நியமனங்களுக்கு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, ஆசிரியர் நியமனம் உள்ளதா என்பதை, பல்கலைக் கழகம் உறுதி செய்ய வேண்டும்.
யு.ஜி.சி., விதிமுறைகளை பூர்த்தி செய்யாத கல்லுாரிகள் மீது, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கல்லுாரிகளிடம் விளக்கம் கோரி, நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக, திருவள்ளுவர் பல்கலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் முடிவதற்கு, இரண்டு மாதங்களாகும் எனவும் தெரிவித்தார்.
யு.ஜி.சி., தரப்பில், தற்போதைய நடவடிக்கைகள் குறித்து மனு தாக்கல் செய்ய, அனுமதியளிக்கப்படுகிறது. விசாரணை, நவம்பர், 26ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment