"ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்" என்பது பழமொழி. ஆடி மாதம் துவங்கியது முதல், பலத்த காற்று வீசுகிறது. ரோட்டோரத்தில் மண் அகற்றப்படாமல் உள்ளதால், காற்றின் வேகத்துக்கு புழுதி படலமாக மாறி, வாகன ஓட்டிகள், நடந்து செல்வோரின் கண்களை பதம் பார்க்கிறது.
சைக்கிளில் செல்லும் மாணவர்கள், மோட்டார் சைக்கிளில் பயணிப்போர், பலத்த காற்றில் சிக்கி திக்குமுக்காடுகின்றனர். அதிகளவு காற்று வீசும் நேரங்களில், கண்களை பாதுகாப்பது குறித்த போதிய விழிப்புணர்வு பலரிடம் இருப்பதில்லை.
கண் மருத்துவர் ஒருவர் கூறியதாவது: "ஒளியை உணரும் மென்மையான உறுப்பு கண்கள்; பார்க்கும் திறனை அளிக்கிறது. கண் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். கண்கள் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் "சி" அவசியம். பால், மீன், முட்டைகோஸ், கேரட், கொத்தமல்லி, பப்பாளி, தக்காளி, சாத்துக்குடி, திராட்சை, இளநீர், நெல்லிக்காய், மாம்பழம் ஆகிய வைட்டமின் நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். அனைத்து வகை கீரைகளும் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. அவற்றை தவிர்க்கக்கூடாது.
கண்ணில் தூசி விழுந்தால், கசக்கக் கூடாது; லேசாக கண்களை திறந்து மூடினால், கண்ணில் உள்ள நீரில் முழ்கி அதுவே வந்துவிடும். உறுத்தல் அதிகமாக இருந்தால், சுத்தமான நீரில் கண்களை கழுவலாம். பலத்த காற்று வீசுவதால், டூவீலர்களில் செல்பவர்கள், கண்ணாடி அணிவது அவசியம். சிறிய மண்துகள், தூசிகளால் கண் வலி ஏற்படும்.
கண் எரிச்சல், கண் சிவந்திருந்தால் மருந்து வாங்கி இரவு தூங்கும் முன் இரண்டு கண்களிலும் ஒரு சொட்டு விடலாம். தொடர்ந்து எரிச்சல் இருந்தால் டாக்டர் ஆலோசனை பெற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்தால், பார்வை மற்றும் அதன் தன்மையை தெரிந்து கொள்ள முடியும்," என்றார்.
No comments:
Post a Comment