பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் இலவச சைக்கிள்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் வந்துள்ளதால், தலைமையாசிரியர்கள் தவிப்பில் உள்ளனர். சில மாணவர்கள் ஏமாற்றமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு பிளஸ் 1 மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டிற்குரிய இலவச சைக்கிள்கள், கடந்தாண்டு மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அனுப்பப்பட்டுள்ளது.
பரமக்குடி கல்வி மாவட்டத்தில், ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் 30 முதல் 50 மாணவர்கள் வரை, சைக்கிள் கிடைக்காமல் ஏமாற்றமடையும் சூழல் நிலவுகிறது. கடந்த ஆண்டு பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கும், ஒவ்வொரு பள்ளியிலும் அதிகபட்சமாக 10 பேர், சைக்கிள் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர்.
பள்ளி தலைமையாசிரியர்களும், யாருக்கு கொடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் கஸ்பார் கூறியதாவது: அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கொடுத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே சைக்கிள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
குறைவாக வந்துள்ளது குறித்து, எந்த புகாரும் இதுவரை இல்லை. பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment