ஊரிலிருந்து 20 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தில் காத்துக்கிடந்து தங்கள் குழந்தைகளைக் சேர்த்துவிட்டுச் செல்கிறார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலையம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிதான் அது. பெற்றோர்களை அந்தப் பள்ளியை நோக்கி வரவைத்திருப்பவர், அந்தப் பள்ளியின் ஆசிரியர் செந்தில்.
தமிழக அரசால் 1975-ம் ஆண்டு மலையம்பாளையம் ஆதிதிராவிடர் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்டது தான் இந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. 17 மாணவர்களைக்கொண்டு துவங்கிய இந்தப் பள்ளிக்கு, 2000-ல் ஆசிரியராக வந்தார் செந்தில். அப்போது 43 மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தனர்.
கல்வி போதிப்பதில் ஆர்வமும் சமூக அக்கறையும்கொண்ட ஆசிரியர் செந்தில், பக்கத்து ஊர்களில் இருக்கும் குழந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்க்கச் சொல்லிக் கேட்டபோது, ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆதிதிராவிடர் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அனுப்ப மற்றவர்கள் மறுத்துவிட, தன்னிடம் படிக்கும் 43 மாணவர்களையும் திறமைமிக்கவர்களாக உருவாக்கினார். மாலை நேரத்தில், அந்த மாணவர்களைப் பக்கத்து ஊர்களுக்கு அழைத்துச்சென்று, அவர்களின் அறிவாற்றலை வெளிக்காட்டச் செய்தார். இதைக் கவனித்தவர்கள், தங்கள் வீட்டுக் குழந்தைகளையும் அந்தப் பள்ளியில் சேர்க்க ஆரம்பித்தனர்.
இப்போது, அரசு அதிகாரிகள், வசதி படைத்தோர் எனப் பல தரப்பினரும் இங்கே தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முந்துகின்றனர். ஆனாலும் ஏழை மாணவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தற்போது இந்தப் பள்ளியில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 185 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் 80 குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து மாற்றல் வாங்கி இங்கே சேர்ந்திருக்கிறார்கள். ஓராசிரியர் பள்ளியாக இருந்த இந்தப் பள்ளியில், இன்று ஐந்து ஆசிரியர்களுடன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக இரண்டு ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். மேலும் வேன் வசதியும் வந்துள்ளது.
இது எப்படிச் சாத்தியமானது?
''முதலில் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகி, அவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்கிறோம். அவர்களை மிரட்டுவதோ, அடிப்பதோ கிடையாது. நான்காம் வகுப்பு வரை செயல்வழிக் கற்றல் முறைப்படி எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் வார்த்தைகளை ஒரு புத்தகமாகத் தயாரித்துக் கொடுக்கிறோம். படங்களைப் பார்த்து அவர்களாகவே புரிந்துகொள்ளத் தேடல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம். ஆங்கில இலக்கணத்தை புரியும்படிச் சொல்லிக்கொடுக்கிறோம். பெற்றோர்களிடம் தினமும் குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறோம். நம்மால் முடிந்ததைச் சரியாகச் செய்தால்தான் பெரிய விஷயத்தையும் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளச் செய்ததால், ஒவ்வோர் ஆண்டும் மாவட்டத்தில் சிறந்த மாணவர்களாக எங்கள் பள்ளி மாணவர்களே திகழ்கின்றனர்'' என்றார் செந்தில்.
அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பலர் தயங்கும் இந்தச் சூழலில், மலையம்பாளையம் அரசுப் பள்ளியில் சேர முண்டியடிக்க வைத்த ஆசிரியர் செந்தில், நிச்சயம் ஒரு கனவு ஆசிரியரே!
- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்
* சுட்டி விகடன் இதழில் இருந்து.
1 comment:
Plz give me contact no&address.
Post a Comment