அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், புதிதாக துவங்கவுள்ள, 398 பாடப் பிரிவுகளுக்கு, அரசாணை எப்போது வெளியாகும் என, இடம் கிடைக்காத மாணவர்கள், நூற்றுக்கணக்கில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மேற்படிப்பில் சேரும் போது, வேலைவாய்ப்பு தரும் படிப்புகளுக்கே, அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் வேலை வாய்ப்பு தரும் படிப்புகள் உள்ளன.
வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் தேவையை கருத்தில் கொண்டு, அரசு கல்லூரிகளில், பி.ஏ., - இதழியல் மற்றும் தொடர்பியல், பாதுகாப்பு துறை படிப்பு, பி.எஸ்சி., - எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ், நுண்ணுயிரியல், விசுவல் கம்யூனிகேஷன்ஸ், பி.எஸ்.டபிள்யூ., - சமூக சேவை உள்ளிட்ட, 398 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும் என, 2013 - 14 தமிழக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது.
அரசு அறிவித்துள்ள புதிய பாடப் பிரிவுகளுக்கு, உடனடியாக அரசாணை வெளியாகும் என்றும், கல்லூரிகள், பல்கலைக் கழக அங்கீகாரத்தை பெற்ற பின், ஜூன் மாத இறுதி வாரம் முதல் மாணவர் சேர்க்கை துவங்கும் எனவும் உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
நடப்பு கல்வியாண்டில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்து, வகுப்புகளும் துவங்கி விட்டன. ஆனால், புதிய பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து, இதுவரை அரசாணை வெளியாகவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க செயலர் பிரதாபன் கூறியதாவது: தற்போது, அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் உள்ளனர். புதிய பாட பிரிவுகளை உடனடியாக கொண்டு வந்தால், இந்த மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை பெற முடியும்.
மேலும், அதில் விருப்பமான பாட பிரிவுகளையும் மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதால், உரிய அரசாணையை உடனடியாக வெளியிட, அரசு ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு, பிரதாபன் கூறினார்.
No comments:
Post a Comment