பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள் 23 பேர் இறந்ததையடுத்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவின் தரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், பள்ளி முதல்வர்களின் நேரடி மேற்பார்வையில் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டும் என்று பள்ளிகள் ஆய்வாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து மீரட்டைச் சேர்ந்த பிரதானாச்சாரியா பரிஷத் என்பவர் அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தற்போதுள்ள நடைமுறை, ஆசிரியர்களின் பணியில் குறுக்கிடுவதாக இருக்கும் என்றும், அண்டை மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இப்பணியை மேற்கொள்வதாகவும் பிரதானாச்சாரியா தனது மனுவில் கூறியிருந்தார்.
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதிய உணவு சமைப்பதில் பழைய முறையே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
“மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதுதான் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களின் பணி. உணவு தயாரிப்பதை மேற்பார்வையிடுவது அவர்கள் பணி அல்ல. அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கினால் கற்பிக்கும் பொறுப்புகளில் குறுக்கீடுகள் ஏற்படும்.
இந்த விஷயத்தில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான திட்டம் அவசியம். இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது. அப்போது, மதிய உணவு தொடர்பாக அரசு தனது கொள்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment