"நாடு முழுவதும், ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் என்பது, முன்னேற்றத்திற்கு உதவாது. ஒவ்வொரு பகுதியிலும், அங்குள்ள தேவையை அறிந்து, அதற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்கி, கல்வியை வழங்கினால் தான், நாடு முன்னேறும்" என, பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் (யு.ஜி.சி) வேத் பிரகாஷ் பேசினார்.
அண்ணா பல்கலையின், 33வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில், நேற்று நடந்தது. கவர்னரும், பல்கலை வேந்தருமான ரோசையா, அண்ணா பல்கலை மற்றும் இதர கல்லூரிகளில் பயின்று, முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, தங்க பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினார்.
விழாவில், யு.ஜி.சி., தலைவர் வேத் பிரகாஷ், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: பல்கலைகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையை வளரும் வேகத்தைப் பார்த்தால், 2017ல், 900 பல்கலைகளும், 47 ஆயிரம் கல்லூரிகளும் நிறைந்த முதல் நாடாக இந்தியா இருக்கும்.
பல்கலைகளும், கல்லூரிகளும் அதிகரித்தாலும், கல்வியின் தரம் மேம்படவில்லை. சமுதாயத்தின் தேவையை, நாம் எப்படி பூர்த்தி செய்யப்போகிறோம் என்பது தான், பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் முன் உள்ள பிரதான கேள்வி.
தரமான கல்வி நிறுவனங்கள், தரமான பாடத்திட்டம், கற்பித்தலில் தரம், தரமான ஆராய்ச்சி திட்டங்கள் ஆகியவை அதிகரித்தால் தான், இதன்மூலம், சமுதாயத்தின் தேவையை நிறைவேற்ற முடியும். மாணவர்கள், தமிழில் ஆழ்ந்த ஆளுமை இல்லாமல் இருக்கலாம்.
சிலர், ஆங்கிலத்தில், ஆழ்ந்த ஆளுமை இல்லாமல் இருக்கலாம். இதுபோன்ற மாணவர்கள், மொழியில் சிறந்து விளங்கும் வகையில், பாடத்திட்டங்களை கொண்டு வந்து, கற்பிக்க வேண்டும். நாடு முழுவதும், ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை வழங்கினால், அது, நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவாது.
ஒவ்வொரு பகுதி வாரியாக, அங்குள்ள தேவையை அறிந்து, அதற்கேற்ப பாடத் திட்டங்களை உருவாக்கி, தரமான கல்வியை வழங்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே, நாடு முன்னேறும். நாட்டில், இன்று 90 கோடி மக்கள், மொபைல்போனை பயன்படுத்துகின்றனர்.
விவசாயிகள் கைகளிலும், மொபைல் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு, தரமான குடிநீரும், 24 மணிநேரமும், தடைபடாத மின்சாரமும் கிடைக்கிறதா என்றால் இல்லை.
இதுபோன்ற ஒரு நிலையில், அனைத்திலும் நாம் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என, கூற முடியாது. குடிநீர், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள், முழுமையாக, அனைவருக்கும் கிடைக்க, உங்களது கல்வி அறிவை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு வேத் பிரகாஷ் பேசினார்.
முன்னதாக, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பேசுகையில், "முந்தைய ஆட்சியினர், அண்ணா பல்கலையின் பெருமையை குலைக்கும் வகையில், பல்வேறு பல்கலைகளாக பிரித்தனர். இதனால், தரமும் குறைந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அனைத்து பல்கலைகளையும், மீண்டும் அண்ணா பல்கலையின் கீழ் கொண்டு வந்து, பல்கலையின் பெருமையை, முதல்வர் மீட்டார்" என்றார்.
அண்ணா பல்கலைகள் இணைப்பிற்குப் பின், முதல் முறையாக, பட்டமளிப்பு விழா நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில், பல்கலை துணைவேந்தர் காளிராஜ் (பொறுப்பு) உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அண்ணா பல்கலை, இதன் உறுப்பு கல்லூரிகள் மற்றும் பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் படித்த மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட 1.44 லட்சம் பேர், பட்டங்களை பெற்றனர்.
No comments:
Post a Comment