Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, March 30, 2013

    கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி....!

    கல்வி கற்பதற்கான உரிமைக் குறியீடுகளை எய்துவது குறிப்பாக மொத்தப் பள்ளிச் சேர்க்கை மற்றும் இடை நிற்றல் அளவுகளில் மிகச் சிறப்பாகக் கருதப்படும் மாநிலங்களுள் தமிழகம் ஒன்று என மாநில நிதியமைச்சர் சமர்ப்பித்த நடப்பாண்டுக்கான ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
    இக்கூற்று சரியானதே. இருப்பினும் தமிழகத்தில் பள்ளிக் கல்வி நிலை குறித்து நாம் திருப்தி அடைந்துவிடக்கூடாது. திருப்தி அடைந்தால் இத்துறையில் உள்ள குறைபாடுகளைப் போக்கிட முடியாது.
            உதாரணமாக, ''அசர்'' (ஆய்வு நிறுவனம்) செய்த ஆய்வின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 53 விழுக்காடு குழந்தைகள் இரண்டாம் வகுப்பிற்கான பாடத்தை வாசிக்க இயலாத நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் இந்த விழுக்காடு 58 சதவிகிதமாக இருந்தது. மேலும், மாணவர் சேர்க்கை விகிதத்தைப் பொருத்தவரை மக்கள் அரசுப் பள்ளிகளை விடுத்து தனியார் பள்ளிகளை நாடும் போக்கு அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வி, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் நிலவும் மேற்கண்ட குறைபாட்டுக்கு கல்வித் தரம் உயராதது முக்கியமான காரணங்களில் ஒன்று.
               கற்பிக்கும் முறை, கல்வி பெறும் சூழல், தாய்மொழியில் திறன், குழந்தைகளின் வாசிப்புத் திறன் போன்ற அம்சங்களைக் கொண்டே கல்வித் தரம் மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த அம்சங்கள் அல்லாமல் பள்ளிகளில் அடிப்படைக் கட்டுமானங்களும் கல்வித் தரம் உயர அவசியம். கல்வித் தரத்தை உயர்த்துவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உள்ளது. மாறி வரும் சூழலுக்கேற்ப ஆசிரியர்களுக்குப் பயிற்சி, தேவையான அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்குவது, ஆசிரியர்களை ஊக்குவிப்பது, பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது போன்றவைகளுக்கு ஆசிரியர்களை அரவணைத்து மாற்றங்களை உருவாக்குவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உள்ளது. கல்வித்தரம் உயர மாநில, மாவட்ட அளவிலான இத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது. கல்வித் தரம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அம்சத்திலும் “அசர்” போன்ற ஆய்வு சுட்டிக்காட்டும் குறைபாடுகளைப் போக்கிட இத்துறை சார்ந்த அதிகாரிகளின் தலையீடும் அவசியமானது.கல்வித் தரம் உயர தேவையான பல அம்சங்களில் ஆசிரியர்களின் பங்கும் முக்கியமான ஒன்று. ஆசிரியர்களின் பாத்திரம், பங்களிப்பு சிறப்பாக உள்ள பள்ளிகளில் தரமும் உயர்கிறது. அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் போக்கும் தடுக்கப்படுகிறது.
            தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஒன்றான இராமம்பாளையம் ஆரம்பப்பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு  கிடைத்தது. கோவை மாவட்டத்திலுள்ள  ஜடையன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது இராமம் பாளையம் கிராமம். கோவையிலிருந்து 38 கி. மீட்டர் தொலைவிலுள்ள இராமம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
             இப்பள்ளி 1930-இல் துவங்கப்பட்டது. சுமார் 1,000 பேர் வசிக்கக் கூடிய இக்கிராமத்திலுள்ள மக்கள் சமீப காலம் வரை தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்காமல் தனியார் மெட்ரி குலேஷன் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினார்கள். இந்நிலை இராமம்பாளையத்திலுள்ள அரசுப் பள்ளிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இதே நிலைமைதான். காரமடை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 3 வகையான அரசுப்பள்ளிகளில் 1,898 மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது கவலையளிக்கக்கூடியது. ஒருபகுதி மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறபோது ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த, குறிப்பாக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் வேறு வழியில்லாத நிலையில் அரசுப் பள்ளிகளில் சேர்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது காரமடை ஒன்றியத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான். இந்நிலைமையை மாற்றிட அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது, ஆசிரியர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்கள் முயன்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதை தடுப்பது மட்டுமல்ல, எண்ணிக்கையை உயர்த்தவும் முடியும் என்பதற்கு இராமம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இராமம்பாளையம் பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை 27 மட் டுமே. நடப்பு ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இதில் தலித் மாணவர்கள் 53 பேர். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 8 பேர், மலைவாழ் வகுப்பைச் சார்ந்தவர் 1. மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிற நிலையில், இராமம்பாளையம் பள்ளியில் மட்டும் உயர்வதற்கு என்ன காரணம்? தற்போது ஈராசிரியர் பள்ளியாகச் செயல்படும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக 56 வயதுடைய சரஸ்வதியும், உதவி ஆசிரியராக 35 வயதான இளைஞர் பி.பிராங்ளின் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்கள். தலைமை ஆசிரியர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற உள்ளார். கணிதம் படித்து ஆசிரியராகப் புதிதாகப் பணியில் சேர்ந்த பிராங்ளின் கல்வித் தரத்தை உயர்த்துவது என்ற முடிவோடு பணியைத் துவங்கினார். இந்த இரண்டு ஆசிரியர்களும் எடுத்த முயற்சிதான் மேற்கண்ட மாற்றத்திற்கு காரணம். இளம் ஆசிரியர் பிராங்ளின் எடுத்த முயற்சிக்கு தலைமை ஆசிரியர் முழு ஒத்துழைப்பு கொடுத்து செயலாற்றியதும் ஆசிரியர்கள் முயற்சிக்கு இராமம்பாளையம் கிராம மக்கள் ஆதரவு அளித்ததும்தான் இந்த மாற்றத்திற்கு காரணம். குழந்தைகள் எளிதில் அமர்ந்து கல்வி கற்க ஏதுவான வட்ட மேசையும், குழந்தைகள் உட்கார இருக்கையும், இருக்கையில் புத்தகங்களை வைத்துக்கொள்ள சிறிய காப்பறையும் உள்ளன.
    குழந்தைகள் தங்கள் புத்தகங்களை வீட்டுக்குச் செல்கிறபோது சுமந்து செல்ல வேண்டியதில்லை. தேவையான புத்தகம், நோட்டுகளை மட்டும் எடுத்துச் சென்றால் போதும். தரையிலிருந்து குழந்தைகளுக்கு எட்டும் உயரம் வரை சுவற்றிலேயே கரும்பலகை, சுவர்முழுவதும் பசுமையான பின்னணியில் வனம் மற்றும் பல விலங்கு களின் ஓவியம், டைல்ஸ் பதித்த தரை என குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் வகுப்பறையில் விரும்பி மகிழ்ச்சியாகக் கற்க ஏதுவான சூழலில் இரண்டு வகுப்பறைகளும், திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் பயன்படுத்த குளிர் சாதன வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வகுப்பறையில் நுழைவு வாயிலிலேயே ஆள் உயரக் கண்ணாடி, சமச்சீர் கல்வி முறை, குழந்தைகளுடன் சரிசமமாக அமர்ந்து கல்வி கற்பிக்கும் முறை ஆகியவை வகுப்பறையின் ஒட் டுமொத்த சூழலையே முற்றாக மாற்றிவிட்டது. மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி, நாளிதழ்களை வாசிக்கப் பழக்கப்படுத்துவது என சிறப்பு முயற்சிகளையும் ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனால் கற்பது சுமையல்ல, கற்பது கற்கண்டே என்ற உணர்வை மாணவர்களுக்கு உருவாக்கிவிட்டார்கள். ஆசிரியர்களுக்கென்று தனி மேசை, நாற்காலி பள்ளியில் இல்லை. பாடப் புத்தகங்கள் வைப்பதற்கும், கற்பதற்கான புத்தகங்களும் அதற்காகவே உருவாக்கப்பட்ட ரேக்குகளில் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. 11 கணிப்பொறிகள் கொண்ட தனியான அறையும், எல்சிடி புரொஜக்டருடன் கூடிய கணிப்பொறி அமைப்பும் உள்ளன. கணினி அறை மற்றும் வகுப்பறைகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க யுபிஎஸ் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளே விரும்பி கடைப்பிடிக்கும் அளவிற்கு தூய்மையாக இருக்க வேண்டியதன் தேவை உணர்த்தப்பட்டதால் டெட்டால் போட்டு கைகழுவும் பழக்கமும், குப்பைகளைத் தவறாமல் குப்பைக் கூடையில் சேகரிக்கும் வழக்கமும் உள்ளன. கடந்த 4 - 5 ஆண்டுகளாக பிராங்ளின் மற்றும் தலைமையாசிரியர் சரஸ்வதி ஆகியோர் எடுத்த முன்முயற்சியால் ஓர் அரசுப் பள்ளி இவ்வளவு வியத்தகு முன்னேற்றங்களை கண்டுள்ளது. அடிப்படையில் விவசாயிகளாக இருக்கும் இவ்வூர் மக்கள் அனைவரும் ஆசிரியர்களின் சீரிய முயற்சிக்கு மேலான ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். குறிப்பாக கிராமக் கல்விக்குழு தலைவர் மகேஷ், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆர்.ஆர்.ஈஸ்வரன் மற்றும் கிராமத்தைச் சார்ந்தவர்கள் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக உள்ளனர். ஜடையம்பாளையம் ஊராட்சித் துணைத்தலைவராக உள்ள ஆர்.கே.பழனிச்சாமி பள்ளிக்கு நிதியுதவி செய்து வருகிறார். ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் மாதிரி வகுப்பறை உருவாக்கப்பட்டு செயல்படத் துவங்கிய நிலையில், அங்கு ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியர் இதே போல் இன்னொரு வகுப்பறையை உருவாக்க ரூ.3 லட்சம் நிதியை ஒதுக்கித் தந்துள்ளார். பள்ளிக்கான சுற்றுச் சுவரும் ஊர்மக்களின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.
            அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக ளில் சேரும் குழந்தைகள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள்தான். இப்பள்ளிகள் தரமானதாக இருந்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். ஏழைக் குழந்தைகளின் எதிர்காலம் ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது. இராமம்பாளையம் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தினால் மேலும் வகுப்பறை கள் கட்டுவதற்கான இடத்தை வழங்கவும் ஊர் மக்கள் தயாராக உள்ளார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் எல்லாம் இராமம்பாளையம் பள்ளிகளாக உருவாகிட ஆசிரியர்களின் முயற்சி முக்கியமானது. இராமம்பாளையம் பள்ளி மாநிலம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுக்கும் சமூகத்திற்கும் உணர்த்தும் பாடத்தைப் புரிந்து கொண்டால் மாற்றம் நிச்சயம். அரசின் ஆதரவு, ஊர் மக்களின் உதவியும் அடிப்படையானது. இராமம்பாளையம் ஆரம்பப்பள்ளி நல்லாசிரியர்களைப் போற்றுவோம். அனைத்து அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இதுபோன்று மாறட்டும்.

    No comments: