இந்தியப் பகுதிகள் குறித்த வரைபட விவரங்களை சட்டவிரோதமாக சேகரித்து வைத்துள்ள கூகுள் நிறுவனம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.இது குறித்து பாஜக எம்.பி. தருண் விஜய் கூறியதாவது:
கூகுள் மேப்பத்தான் 2013 என்ற வரைபடப் போட்டியை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. தங்கள் பகுதி சார்ந்த வரைபட விவரங்களை அளிக்கும் படி இப்போட்டி மூலம் தனது வாடிக்கையாளர்களை கூகுள் கேட்டுக் கொண்டுள்ளது.இந்தியாவின் ஒவ்வொரு அங்குலத்தையும், சட்டவிரோதமாக வரைபடமாகச் சேகரிக்கும் கூகுளின் இந்த செயல், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் வரைபடம் தொடர்பான நடவடிக்கைகள், தேசிய வரைபட விதிமுறைகளையும், பாதுகாப்பு அமைச்சகம் அவ்வப்போது வெளியிடும் வரைபடம் தொடர்பான நெறிமுறைகளையும் மீறுவதாக உள்ளது.பாதுகாக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வகையிலான அளவைப் பணிகளை இந்திய அளவையியல் துறை தலைவர் (எஸ்.ஓ.ஐ) மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.கூகுள் நிறுவனத்திடம் உள்ள இந்தியாவின் வரைபடம் தொடர்பான அனைத்துத் தரவுகளையும் (டேட்டா), இந்திய அளவையியல் துறையிடம் ஒப்படைக்க அரசு உத்தரவிட வேண்டும்.கூகுள் நிறுவனத்தைக் கட்டுப்படுத்துவதுடன், அனுமதியின்றி வரைபடத்தயாரிப்பில் ஈடுபட்ட அந்நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூகுள் இந்தியா நிறுவனத்தின் தலைவரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment