புதுச்சேரி, காரைக்காலில் தனித்தேர்வர்கள் உட்பட 19,572 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மார்ச் 8ம் தேதி தேர்வு துவங்குவதால், ஏற்பாடுகளை, கல்வித்துறை தீவிரப்படுத்தியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் மார்ச் 8ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது.
காலை 9:15 முதல் மதியம் 12.00 மணி வரை நடக்கும் தேர்வில், வினாத் தாள்களை காலை 9:15 மணி முதல் 9:25 வரை படிக்கவும், மாணவர்களின் விவரங்களை காலை 9:25 முதல் 9:30 வரை சரி பார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 37 மையங்களில் தேர்வுகள் நடக்கிறது. 240 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 14,792 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதில், 7,488 மாணவர்களும், 7,304 மாணவியரும் அடங்குவர். தனித்தேர்வர்களாக 1,575 பேர் தேர்வு எழுது கின்றனர். 800க்கும் மேற்பட்ட அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்தில், 61 பள்ளிகளை சேர்ந்த 1,418 மாணவர் கள், 1,422 மாணவியர் என, மொத்தம் 2,840 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதில் 27 அரசு பள்ளி களை சேர்ந்த 1,374 மாணவ, மாணவியரும், 34 தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களை சேர்ந்த 1,466 மாணவ, மாணவியரும் அடங்குவர். இது தவிர 365 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
காரைக்காலில் 13 மையங்களில் தேர்வு நடக்கிறது. 170க் கும் மேற்பட்ட அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பறக்கும் படை அமைப்பு
தேர்வு மார்ச் ௮ம் தேதி துவங்குவதையொட்டி, அதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் தீவிர படுத்தியுள்ளனர். தேர்வு அறையில், அறை கண்காணிப்பாளர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் முறைகேடுகளை தடுக்க, புதுச்சேரி, காரைக்காலில், அனைத்து மையங்களிலும் நிலையான பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், முதன்மைக் கல்வி அதிகாரி மேற்பார்வையில் தனி பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment