மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வழிகள் குறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. சமூக பாதுகாப்பு துறை சார்பில், மாணவர்கள் தற்கொலை தடுப்பு திட்டம் என்ற, ஒரு நாள் ஆசிரியர் பயிற்சி வகுப்பு, கிழக்கு தாம்பரம், புரொபசர்ஸ் காலனி, எஸ்.ஓ.எஸ்., குழந்தைகள் காப்பகத்தில், நேற்று நடந்தது.
பயிற்சி வகுப்பில், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை, அவற்றால் ஏற்படும் மனச்சிதைவு, தடுக்கும் வழிகள், மன நல ஆலோசனைகள், மாணவர்களை கையாளுதல் உள்ளிட்டவை குறித்து, ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியும், மனநல ஆலோசகருமான, டாக்டர்.ராமநாதன் பேசியதாவது :
இந்தியாவில், ஐந்து நிமிடத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில், ஆண்டுக்கு, 1.37 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தன்மதிப்புணர்வு குறைவாக உள்ளவர்களே, அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மாணவர்கள் மீது படிப்பை திணிக்க கூடாது. பெற்றோர், மாணவர்களிடம் பேச வேண்டும். ஆசிரியர்கள், ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு, மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சிகளை கற்று தர வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளோர் அனைவருமே, குழந்தைகள் தான். 2 வயதுக்குள், ஒரு குழந்தைக்கு நல்ல உணவும்; 5 - 8 வயதிற்குள், நல்ல பழக்க வழக்கங்களையும், ஆசிரியர்கள் கற்று தர வேண்டும்.
No comments:
Post a Comment