அண்ணா பல்கலையில் துணைவேந்தர் இல்லாததால், 580 கல்லுாரிகளில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பட்டம் பெற முடியாமல் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர். அண்ணா பல்கலை இணைப்பில், 580க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்ட் மற்றும் மேலாண் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., - எம்.பி.ஏ., என, பல்வேறு இளநிலை, முதுநிலை படிப்புகள் இந்த கல்லுாரிகளில் நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலையின் நேரடி நான்கு கல்லுாரிகளுக்கும், டிசம்பரில் பட்டமளிப்பு விழா நடக்கும். அதை தொடர்ந்து, இணைப்பு கல்லுாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
சான்றிதழ் பெற்ற இணைப்பு கல்லுாரிகள், தனித்தனியாக முக்கிய பிரமுகர்களை அழைத்து பட்டமளிப்பு விழா நடத்தும். ஆனால், இந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கு துணைவேந்தர் இல்லாததால் பட்டமளிப்பு விழா இன்னும் நடத்தவில்லை; சிண்டிகேட்டும் கூட்டப்படவில்லை.
அதனால், இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள், பட்ட சான்றிதழ் கிடைக்காமல் தவிப்பில் உள்ளனர். இணைப்பு கல்லுாரிகளில், பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி படித்த மாணவர்களும், உரிய நேரத்தில் சான்றிதழ் கிடைக்காமல், வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment