“ஆயிரம் முறை தோற்றாலும், இன்னொரு முறை முயற்சி செய்” என்றார் சுவாமி விவேகானந்தர். வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லாம் ‘வெற்றியின் ரகசியத்தை’, தோல்வியின் மூலம்தான் கற்றுக் கொண்டுள்ளார்கள்.
‘வெற்றி’ பரிசை தருகிறது; ‘தோல்வி’ பாடத்தைக் கற்றுத் தருகிறது. வெற்றி நம்மை வெளி உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. தோல்விதான் நம்மை நமக்கே அடையாளம் காட்டுகிறது! தண்ணீரைப் பார்த்து அச்சப்படுகின்றவன் ஒருபோதும் நீச்சலைக் கற்றுக் கொள்ளமுடியாது. அதுபோலத்தான் தோல்வியைக் கண்டு அஞ்சுகிறவன் வெற்றிக் கனியைச் சுவைக்க முடியாது!
தன்னிடமுள்ள திறமையினால் வென்றவர்களை விடத் தொடர்முயற்சியினால் வென்றவர்களே அதிகம். முயற்சியை நிறுத்தாதவர்கள் எப்போதும் தோல்வியுற்றதாக அர்த்தம் இல்லை. “இந்தமுறை வெற்றி வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். இன்னும் முயற்சிப்பேன்” என்று தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து போராடுபவர்களை, தோல்வி எப்போதும் நெருங்குவதில்லை.
தொடர்ச்சியான் முயற்சியுடன், முயற்சிக்கு முயற்சி முன்னேற்றம் இருக்கவேண்டும். ஒவ்வொரு முறை முயற்சிக்கின்றபோதும், கிடைக்கின்ற அனுபவத்தை அடுத்த முயற்சியில் செயலாக்கம் செய்ய வேண்டும்.
மின்சார பல்பை கண்டுபிடிக்கும் தனது முயற்சியில் பத்தாயிரம் முறை தோல்வியைத் தழுவிய விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ‘பத்தாயிரம் முறைகளில் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க முடியாது’ என்பதை கண்டுபிடித்துவிட்டேன் என்றாராம். “பத்தாவது முறை தன்மீது விழுந்தவனைப் பார்த்து உன்னால் முடியும் எழுந்திரு! ஏற்கனவே நீ ஒன்பது முறை எழுந்தவன் தானே” என்றதாம் பூமி!
வீழாமல் இருப்பதல்ல வெற்றி; வீழும்போது வீறு கொண்டு எழுவதுதான் வெற்றி. மேலும், எப்படி வீழ்ந்தோம் என்பதைவிட எப்படி எழுந்தோம் என்பதைக் கொண்டாடிடவே உலகம் காத்திருக்கிறது. தோல்வியை அவமானமாகக் கருதாமல், அனுபவமாகக் கருதவேண்டும். ஆம்! முயன்று தோற்றால் அது அனுபவம், முயலாமலேயே தோற்றால் அதுதான் அவமானம்!
புதிய தளிர்களை விடுகின்ற செடிதான் வளர்கிறது. அதுபோல புதிய முயற்சிகளை எடுக்கின்ற மனிதர்கள்தான் உயர்கின்றார்கள். முயற்சியை நிறுத்துவதும் மூச்சை நிறுத்துவதும் ஒன்றுதான். முயற்சியை மூச்சாக்குங்கள்; வெற்றி உங்கள் விலாசமாகும்!
-முனைவர் கவிதாசன்
No comments:
Post a Comment