பல்வேறு காரணங்களுக்காக, தனியார் பள்ளிகளிலிருந்து இடையில் நிற்கும் மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர்க்க மறுப்பதால், அவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் செப்டம்பர், 31 ம் தேதி வரை, மாணவர் சேர்க்கை நடடக்கிறது. ஆனாலும், கட்டாயக் கல்விச்சட்டத்தின் படி, 14 வயது வரையுள்ள மாணவர்களை, பள்ளியில் சேர்க்க எவ்வித மறுப்பும் தெரிவிக்கக்கூடாது என, வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும், அரசு பள்ளிகளில் பெரும்பாலானவற்றில், செப்டம்பர், 31 ம் தேதிக்கு பின் மாணவர்களை சேர்ப்பதில்லை. பல்வேறு காரணங்களால், படிக்கும் பள்ளியிலிருந்து இடையில் நின்ற மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர்க்காததால், அவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது:
தனியார் பள்ளிகளின் மயக்கும் வார்த்தைகளை நம்பி, பல பெற்றோர் தகுதிக்கு மீறி, அப்பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர். அதன் பின், கட்டணத்தை செலுத்த முடியாமல், தவிக்கும் போதும், சரியாக படிக்காத மாணவர்களையும், தனியார் பள்ளி நிர்வாகம் மாற்றுச்சான்றிதழ் கொடுத்து அனுப்பி விடுகிறது. ஆண்டின் இடையில், அரசு பள்ளிகளில் சேர்க்க சென்றால், அங்கு தலைமை ஆசிரியர்களும் மறுப்பு தெரிவிக்கின்றனர். நலத்திட்ட உதவிகள் வேண்டாம் என, எழுதிக்கொடுத்தால் கூட சேர்க்க மறுக்கின்றனர்.
இதனால், பல மாணவர்கள் ஓராண்டு வரை வீணடிக்கும் நிலை உள்ளது. அதில் பலரும் அதற்கு பின் கல்வியை தொடர்வதில்லை. குறைந்தபட்சம், 14 வயது வரையுள்ள குழந்தைகளையாவது அரசு பள்ளிகளில் எப்போது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment