தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் தொடக்கக்கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் கீழும் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல இலட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் பள்ளியை துப்பரவு செய்யவோ, கழிப்பிடங்களை சுத்தம் செய்யவோ பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது குறித்து ஆசிரியர்கள் பல காலமாக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதன் விளைவாக உள்ளாட்சி துறையில் உள்ள பணியாளர்களை சுழற்சி அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள அரசு உத்தரவிட்டது.
இதற்கு உள்ளாட்சி துறை பணியாளர்கள் சரியாக ஒத்துழைக்காததால் ஆசிரியர் அமைப்புகள் நிரந்தர பணியாளர்களை அரசே நியமிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 30 அன்று பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களை நியமித்துக்கொள்ள நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டிசம்பர் 18 அன்று கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பள்ளிகளின் வகைக்கேற்ப நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிதியானது மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒதுக்காமல் பள்ளிகளின் வகைக்கேற்ப ஒதுக்கியுள்ளதால் அதிக மாணவர் எண்ணிக்கையுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் பாதிக்கப்படும். எனவே மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கிட வேண்டும் என ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டத்தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டப்பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூறியதாவது.
அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் கோரிக்கையின் பயனாக தமிழக அரசு தற்பொழுது நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எங்கள் அமைப்பின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இதில் தொடக்கப்பள்ளிகளுக்கு ஒரு மாதத்திற்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ750ம், தூய்மை செய்யும் பொருட்கள் வாங்க ரூ300ம் என மொத்தம் ரூ1050 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப்போல நடுநிலைப்பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ1000ம், தூய்மை செய்யும் பொருட்கள் வாங்க ரூ500ம் என மொத்தம் ரூ1500ம், உயர்நிலைப்பள்ளிகளுக்கு ரூ1500 உடன் ரூ750 சேர்த்து மொத்தம் ரூ2250 எனவும், மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ2000த்துடன் ரூ1000 சேர்த்து மொத்தம் ரூ3000 என ஒதுக்கீட செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை வகைப்படுத்தி நிதி ஒதுக்கியிருப்பதால் அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு போதிய நிதி இல்லாமல் இப்பணியினை மேற்கொள்வதில் மீண்டும் தலைமையாசிரியர்கள் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனவே பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment