அண்ணா பல்கலையின் ஆராய்ச்சி பணிகளுக்காக, சீர்மிகு பல்கலை என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின், மல்டி மீடியா கல்வி ஆராய்ச்சி மையம், ஊடக அறிவியல் துறை ஆகியவை, உலக சுகாதார மையத்துடன் இணைந்து, கை கழுவும் முறை மற்றும் விழிப்புணர்வு திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு, விருது வழங்கும் விழாவை நேற்று நடத்தியது.
பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., துணை தலைவர் தேவராஜ், விருதுகளை வழங்கி பேசியதாவது:
சமீபத்தில், அண்ணா பல்கலையில், ஆன்டி பாக்டீரியா தொடர்பான ஆராய்ச்சி செய்து, புதிய அம்சங்களை கண்டுபிடித்துள்ளனர். முன்னோடியான இந்த திட்டத்தை, பல்கலை துணைவேந்தர் ராஜாராம், பதிவாளர் கணேசன் அடங்கிய குழுவினர், மூன்று முறை, யு.ஜி.சி.,யை அணுகி விளக்கம் அளித்தனர். அதை அங்கீகரித்து, அண்ணா பல்கலைக்கு, யு.ஜி.சி.,யின், சீர்மிகு பல்கலை என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், 35 நிறுவனங்கள் இந்த அந்தஸ்துக்கு விண்ணப்பித்தன. அதில், இறுதி பட்டியலில், ஏழு பல்கலை இடம்பிடித்து, அண்ணா பல்கலை மட்டும் தேர்வாகியது. இந்த அந்தஸ்தால், பல்கலையின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு, 75 கோடி ரூபாய் நிதியுதவி கிடைக்கும்.
இதை பயன்படுத்தி, கல்வி ஆராய்ச்சியாக இல்லாமல், சமூகத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்புகளை செய்து, அதற்கு காப்புரிமை பெற வேண்டும். யு.ஜி.சி., நிதியில் மேற்கொள்ளும் திட்டங்களை, நாங்கள் நேரடியாக கண்காணித்து ஆய்வு செய்வோம். இவ்வாறு அவர் பேசினார். துணைவேந்தர் ராஜாராம், பதிவாளர் கணேசன், யுனிசெப் பொறுப்பாளர் ஜெகதீசன், பேராசிரியர்கள் கவுரி, வேலாயுதம் பங்கேற்றனர். சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை ஆகியவற்றுக்கு, சீர்மிகு பல்கலை அந்தஸ்து ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment