வீடுகளில் புத்தகம் வாசிக்கும் சூழலை, பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். நல்ல புத்தகங்களை, குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும், என, வாழ்வியல் ஆலோசகர் சிவக்குமார் பழனியப்பன் அறிவுறுத்தினார்.
திருப்பூர் அபாகஸ் இன்டர்நேஷனல் மாண்டிசோரி பள்ளியில், 12வது ஆண்டு விழா நடந்தது. இதில், சிவக்குமார் பழனியப்பன் பேசியதாவது: குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்; பலர், அவ்வாறு செய்வதில்லை. தாத்தா பாட்டியுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த சூழல், இன்றில்லை. இதனால், குழந்தைகளுக்கு வழிகாட்டுதல், அவர்களது வாழ்க்கையை நெறிபடுத்துதல் இல்லாமல் போய்விட்டது. அன்று, நவீன வசதிகள் இல்லாதபோதும், வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்கள், சிந்தனைகள், குழந்தைகளுக்கு கிடைத்தன; இன்றைய காலகட்டம், அவ்வாறு இல்லாதது வருத்தமளிக்கிறது.
குழந்தைகளுக்கு, பெற்றோரின் வழிகாட்டுதல் மிக முக்கியம். குழந்தைகளின் நடவடிக்கைகளை, கூர்ந்து கவனித்து, அவர்களது மனநிலை, உடல்நிலை ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். ஆனால், சினிமா, டிவி பாதிப்பு, பெற்றோரை மட்டுமின்றி குழந்தைகளையும் கடுமையாக பாதித்து வருகிறது. புத்தகங்கள் வாசிக்கும் சூழலை, வீடுகளில் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். நல்ல புத்தகங்களை, குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். வாழ்வியல் சார்ந்த வளர்ச்சிக்கு, நல்ல புத்தகங்களை படிப்பது அவசியம். மகிழ்ச்சியை, துக்கத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை, குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத்தர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தாளாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ் பாபு வரவேற்றார். நிர்வாக அலுவலர் ஆப்னா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சதீஷ், ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. கடற்கொள்ளையர் ஆங்கில படத்தை மையமாக வைத்து, அதன் காட்சியமைப்பை மாணவ, மாணவியர் நடித்துக் காட்டினர். ஆங்கில ஆசிரியை சுலக்ஷனா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment