வெள்ளநீர் தேங்கிய தனியார் பள்ளிக்கு, 40 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி பாதிப்பால் கொதிப்படைந்த பெற்றோர், நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர்.
வளசரவாக்கம், சின்ன போரூரில் தனியார் பள்ளி உள்ளது. கன மழை காரணமாக, பள்ளிக்கு கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதால், 40 நாட்களுக்கு மேலாகியும் பள்ளி திறக்கப்படவில்லை. வெள்ளநீரை அகற்ற, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது.கொதிப்படைந்த பெற்றோர், நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று, பள்ளியில் காவலாளிகளை தவிர, யாரும் இல்லை. இதனால், ஏமாற்றத்துடன் பெற்றோர் திரும்பினர்.
இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது; கடந்த, 40 நாட்களுக்கும் மேலாக, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள அடித்தளத்தில், 5 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளின் வகுப்புகள் மற்றும் புத்தக அங்காடி உள்ளது. அங்கு இன்னும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால், பள்ளி கட்டடத்தின் உறுதி குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், அடுத்த பேரிடரின் போது, தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுத்து உள்ளனர் என, தெரியவில்லை. பள்ளி நிர்வாகத்தினர் விளக்கம் தர மறுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment