மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் 33 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறந்தன. ஒரு மாத காலமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை இயக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இத்தகவலை பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பள்ளிகள் திறந்தன : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 33 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்கின்றனர். பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் வழங்க இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்களும், வெள்ள பாதிப்புக்களில் இருந்து மாணவர்கள் மீண்டு வருவதற்காக அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தவும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. புனரமைப்பு பணிகள் நிறைவடையாததால் சென்னையில் 29 பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் 5 பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
சனிக்கிழமையிலும் பள்ளிகள் :
இந்நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமைகளிலும் அரசு பள்ளிகளை இயக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு மாத விடுமுறையை ஈடுகட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளிகளின் வேலை நேரத்தை நீட்டிக்கவும் பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம் : வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வந்த தகவலை பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அது போன்று எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என பள்ளி கல்வித்துறை இயக்குனரகமும் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது
No comments:
Post a Comment