தமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே...
திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், "ஹிப்ஹாப் தமிழா" திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு,
சமீபத்தில் உங்களுடைய படங்களை, பாடல்களை வெற்றி பெற வைக்கும் பொருட்டு நீங்கள் வெளியிடும் உங்கள் படைப்புகள் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை.
பொதுவாக தமிழர்கள் சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று பார்ப்பது கிடையாது. படங்களில், மெகா சீரியல்களில் வரும் வில்லன்கள் வில்லிகள் நன்றாக இருக்கக்கூடாது என்று வாரித் தூற்றும் அளவுக்கு அவர்களது வாழ்க்கை சினிமாவுடன் பிணைக்கப்பட்டு உள்ளது. சினிமா நடிகர்களை நாட்டை ஆள வைத்து அழகு பார்ப்பவர்கள்.
இத்தகைய சமூகத்தில், உங்களுடைய பாடல்களை, பட வசனங்களை வைத்து இங்கு தினம் தினம் எவ்வளவு பெண்கள் 'வெர்பல் அப்யூஸ்' எனப்படும், ’வார்த்தை வதை’யை எதிர்கொள்கிறார்கள் என்பதை ரசிகர்களை மகிழ்விக்க பறந்து பறந்து வேலை பார்க்கும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ‘இது வெறும் ஜாலிக்குதான்... நாங்கள் பெண்களை திட்டவில்லை’ என்று நீங்கள் கூறும் பதில்களை கேட்டு கேட்டு காது புளித்துப்போனவர்களில் நானும் ஒருத்தி!
அது என்ன மாயமோ புரியவில்லை, என்ன மந்திரமோ தெரியவில்லை ஜாலிக்கு திட்ட பெண்கள் மட்டுமே கிடைக்கிறார்கள். "க்ளப்புல மப்புல" பெண்கள் திரிவதாக பாடிய ’ஹிப்பாப் தமிழா’ திரு.ஆதியின் கண்களுக்கு குடிப்பழக்கம் உள்ள சுமார் நான்கு சதவீத பெண்கள் மட்டுமே தெரிகிறார்கள். அவருக்குப் பிடித்த பாரதியாரின் கூற்றின்படி நிமிர்ந்த நன்னடையில், நேர்கொண்ட பார்வையுடன் இப்புவியில் யாருக்கும் அஞ்சாத துணிவுடன் இந்த சமூகத்தில் போராடி முன்னேறும் பெண்களை பார்க்காமல் போய்விட்டார். குடிக்கும் பழக்கம் உள்ள முக்கால்வாசி ஆண்களைப் பற்றி பாடியதே இல்லை. பெண்கள் கர்சீப்பை கட்டிக் கொண்டு நடமாடுவதாகக் கூறிய திரு.ஆதி அவர்கள், ஏனோ லோ ஃஹிப், ஜீன்ஸ், டீ ஷர்ட், ஷார்ட்ஸ் போடும் ஆண்களிடம் வேட்டி சட்டை கட்ட சொல்லவே மறந்து விட்டார். 'ஆண்கள் குடித்தால், பெண்கள் குடிப்பதில் என்ன தவறு... பெண்களும் குடிக்க வேண்டும் ' என்று வறட்டு பெண்ணியம் பேசும் பெண் அல்ல நான். மது அருந்துவது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்கும். ஆனால் ‘பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள்’ என்று கூப்பாடு போடுவதுதான் இங்கு பிரச்னை.
இங்கு பல பெண்கள் ஆசிட் வீச்சிலும் இன்னும் பல கொடூரமான வழிகளிலும் கொல்லப்பட, சித்ரவதை செய்யப்பட ‘அடிடா அவள, ஒதடா அவள, வெட்ரா அவள’ என்று பாட எப்படிதான் மனசு வருகிறதோ என்று தெரியவில்லை ’பொயட்டு’ திரு.தனுஷ் அவர்களுக்கு. நெரிசல்மிக்க நகரத்தின் பீக் ஹவரில், நகரப் பேருந்தில் பயணிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் அவஸ்தையை அறிவீர்களா நீங்கள்! சமூகக் காரணங்களால் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்க முடியாமல், இஷ்டப்பட்ட வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டின் பொருளாதாரத்துக்கு கை கொடுக்க ஏதோ ஒரு வேலைக்கு காலையில் செல்லும்போது, எத்தனை உரசல்கள், சீண்டல்களை நாங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா? உடல் முழுக்க உறுப்பு முளைத்த எத்தனை ‘ஆண்களை’க் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது தெரியுமா? உடல் அவஸ்தையை பொறுத்துக் கொண்டு, விடுப்பு எடுக்க முடியாமல் மாதம் முழுக்க வேலைக்குச் செல்லும் எங்களை, எப்படி ஒரு போகப் பொருளாக மட்டும் உங்களால் பார்க்க முடிகிறது!?
இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஒரு படம் முழுக்கவே பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தினார் திரு.ஜி.வி.பிரகாஷ். வெர்ஜினிட்டி என்ற பிற்போக்கு தனத்தை முதன்மைப்படுத்தி, வெர்ஜின் பெண்கள் டைனோசர் காலத்திலேயே போய்விட்டனர் என்றாகவெல்லாம் பட வசனங்கள். இது முழுக்க முழுக்க முட்டாள்தனத்தின் உச்சகட்டம். ஒரு பெண்ணை வெறும் பாலியல் உறவுக்காக மட்டுமே ஒருவன் பயன்படுத்தி அவளைத் தூக்கி எறிந்தால், அந்தப் பெண் வெர்ஜினிட்டியை இழந்து விட்டதன் காரணத்தால் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரக் கூடாதா? காதலன் கைவிட்ட, கணவனைப் பறிகொடுத்த பெண்கள் இன்னொரு திருமணம் செய்யக்கூடாதா? மணமுறிவு பெற்ற பெண்கள் இன்னொரு ஆணைத் திருமணம் செய்யக் கூடாதா? பெண்களுக்கு பலமான பொருட்களை தூக்கினாலும், வெகு தூரம் சைக்கில் ஓட்டினாலும், கன்னித்திரை பாதிக்கப்பட்டு நீங்கள் பொக்கிஷமாகக் கருதும் ‘வெர்ஜினிட்டி’ போய்விடும். தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெறும் பெண்களுக்கும் வெர்ஜினிட்டி இருக்காது. இது மருத்துவ உண்மை. அவர்களை என்ன செய்வது? அப்படியான பெண்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள்?
இரண்டு நாட்களுக்கு முன் திரு.சிம்பு-திரு.அனிருத் கூட்டணியில் வெளிவந்த ’பீப் சாங்’... வக்கிரத்தின் உச்சம்! பாடலின் வரிகள் ஆபாசத்தின் உச்சம். அந்தப் பாடலின் ஒரு வரி, 'பெண்களை உடலுறவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம், காதல் வேண்டாம்' என்கிறது. நாங்கள் பெண்கள், ஆண்களான உங்களைப் போலவே ரத்தமும் சதையும் உள்ளவர்கள். காமத்துக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்ல.
ஆண்களால் காதல் என்ற பெயரில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். ஆனால் பெண்கள் ஏமாற்றுவார்கள், பொழுதுபோக்குக்காக காதலிப்பவர்கள் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான ஒரு பொது புத்தியை கட்டமைக்கிற வேலையை செய்கின்றன தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் உங்களுடைய பாடல்களும் படங்களும். இப்படியான முயற்சிகள் பெண்களை ஏமாற்றிய சில ஆண்கள் மீதிருக்கும் களங்கத்தை மறைக்க முனைவதாகவே தெரிகிறது. ஆனால், ஒரு பெண்ணாக நாங்களே பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருந்து, நாங்களே குற்றவாளிகளாகவும் ஆக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் துன்பத்துக்கு உள்ளாக்கப்படுவது இந்தச் சமூகத்தில் எங்களுக்குப் புதிதாக நடைபெறுவதில்லை. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே குற்றம் சுமத்தும் சமூகத்தில்தானே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
ஒரு பெண்ணாக எங்களது சிறிய அபிலாஷை என்னவெனில், இனியாவது இது மாதிரி படங்களையும், பாடல்களையும், வசனங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவும், தவிர்க்கவும். உங்கள் வீட்டுப் பெண்களையும் சேர்த்து பெண்கள் இனத்தின் வலியைப் புரிந்து கொள்ளவும்!
அப்புறம் இன்னொரு விஷயம்... ‘இது என்னோட பெர்சனல் கலெக்ஷன்... அதைப் பற்றி ஏன் விமர்சிக்கிறீர்கள்?’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் போல. பெர்சனல் கலெக்ஷன்ல் பொதுவெளிக்கு வரவிடாமல் தடுத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அப்படி வந்த பெர்சனல் கலெக்ஷன் ஒட்டுமொத்த பெண்களையும் பாதிப்பதாக இருந்தால், ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தவே செய்வோம். உங்களுக்கு இருக்கும் படைப்புச் சுதந்திரம் போல, எங்களுக்கு ‘விமர்சன சுதந்திரமும்’ இருக்கிறது.
இன்னுமொரு முக்கியமான விஷயம்... சென்னையே நூறாண்டு காணாத வெள்ளப் பாதிப்பில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, இந்தப் பாடல் உங்களுக்கே கூட தெரியாமல் வெளியாக வேண்டிய தேவை என்ன? இந்திய சினிமாக்களிலேயே கிளாமர் கொடி கட்டிப் பறக்கும் தெலுங்கு திரையுலகமே, சென்னை வெள்ளத்துக்கு ஒன்றிணைந்து உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் சமயம், நீங்கள் தமிழர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை... இப்படியான உபத்திரவங்கள் செய்யாமல் இருக்கலாமே..! இந்த ஒற்றை கேடுகெட்ட பாடல், மக்களின் மனநிலையில், கவனத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிவிட்டதை அறிவீர்களா? அவ்வளவு ஏன், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்த நானே, வேலை மெனக்கெட்டு இந்தக் கட்டுரைக்காக சில மணி நேரங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறேனே!
இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் மற்றும் வார்த்தைகள் திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், திரு.ஆதி ஆகியோர்களுக்கு ஏதேனும் மன சங்கடத்தை உண்டாக்கியிருந்தால்.... அதற்காக நான் வருந்தப்போவது இல்லை. அதைக் காட்டிலும் லட்சம், கோடி மடங்கு உங்கள் ’படைப்பு’கள் என்னைப் போன்ற பெண்களை அனுதினமும் துரத்துகின்றன... தீண்டுகின்றன. அது தரும் துன்பத்தையும் துயரத்தையும் ஒரு நொடி உணர்ந்தால் கூட, இனி அப்படியான ‘படைப்பு’களைப் படைக்க மாட்டீர்கள்!
நன்றி!
- ரமணி மோகனகிருஷ்ணன் (மாணவப் பத்திரிக்கையாளர்)
2 comments:
இவர்கள் எவ்வளவு சொன்னாலும் திருந்த போவதில்லை.
Useless. ..fellows
Post a Comment