நாடு முழுவதும் ஆசிரியர் தினம் (செப்.5) சனிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்களுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு காணொலி முறையில் கலந்துரையாடுகிறார்.
குடியரசு முன்னாள் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு, தில்லியில் உள்ள மானேக்ஷா கலையரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாணவர்களுடன் பிரதமர் மோடி நேரில் கலந்துரையாடுகிறார்.
அதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 800 மாணவர்களுடனும், 60 ஆசிரியர்களுடனும் அவர் காணொலி முறையில் விவாதிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் உடனிருப்பார். இது தொடர்பாக பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "மாணவர்களுடன் கலந்துரையாட ஆவலுடன் இருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடியுடன் சந்திரிகா சந்திப்பு: இதனிடையே, தில்லியில் நடைபெற்ற ஹிந்து-பௌத்த மதக் கருத்தரங்கில் பங்கேற்க தில்லி வந்துள்ள இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா, பிரதமர் மோடியை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, இந்திய-இலங்கை உறவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மோடியுடன் அவர் விவாதித்தார்.
சந்திரிகாவின் தலைமைப் பண்புகளைப் பாராட்டிய மோடி, இலங்கையுடனான உறவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்தார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment