புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி திங்கள்கிழமை (செப்டம்பர் 7) திறக்கப்படுகிறது. புதிய கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்க உள்ளார். சென்னையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் மற்றொரு பகுதியில் ரூ. 212 கோடி செலவில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.
புதிய மருத்துவக் கல்லூரிக்காக 7 தளங்கள் கொண்ட 7 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் தற்போது 3 கட்டடங்களில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நிர்வாகப் பிரிவுகள் போன்றவை செயல்பட உள்ளன.
இந்தக் கல்லூரியின் சார்பு மருத்துவமனையாகச் செயல்படுவதற்காக, சென்னை- திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூர்பா காந்தி அரசு தாய்-சேய் நல மருத்துவமனை தற்போது பொது மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
100 இடங்கள்: புதிய மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களை தமிழக அரசு நிர்ணயித்தது. புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலும் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தின் 20-ஆவது அரசு மருத்துவக் கல்லூரியான ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற இரண்டு கட்டக் கலந்தாய்வில் மாநில அரசின் ஒதுக்கீட்டில் 85 இடங்கள் நிரப்பப்பட்டன.
பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, மாணவர் சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில், புதிய மருத்துவக் கல்லூரியைத் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது:
கல்லூரியில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. கல்லூரிக்கான திறப்பு விழா செப்டம்பர் 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்க உள்ளார்.
திறப்பு விழா நடைபெற்று முடிந்ததும், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment