கெங்கைகொண்டானில் என்.எல்.சி., விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்துவதால், அங்கு இயங்கிய ஊராட்சி துவக்கப் பள்ளியைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தங்கள் பிள்ளைகளை எங்கு சேர்ப்பது என தெரியாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.
கெங்கைகொண்டான் காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் 32 பேர் படிக்கின்றனர். என்.எல்.சி., விரிவாக்கப் பணிக்காக இப்பகுதியில் நிலம் கையகப்படுத்துவதால், இங்கு பள்ளியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளியில் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழைப் பெற்று, அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது.
ஆனால், பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழை வாங்க மறுக்கும் பெற்றோர்கள், பள்ளியைத் தொடர்ந்து நடத்த கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில், பள்ளியை மூட நேற்று முன்தினம் உத்தரவிட்ட கல்வித்துறை நிர்வாகம், அங்கு பணிபுரிந்த இரண்டு ஆசிரியைகளையும் வடக்குப்பம், கெங்கைகொண்டான் அரசு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்தது. ஆசிரியர் இல்லாத நிலையில், பள்ளியில் மாணவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக சத்துணவு மட்டும் வழங்கப்படுகிறது.
மாணவர்களும் வழக்கம் போல் பள்ளிக்கு வந்து, மதியம் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு துணையாக பெற்றோர்கள் வந்து செல்கின்றனர். இது குறித்து கம்மாபுரம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேஸ்வரி கூறுகையில், என்.எல்.சி., நிர்வாகம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக இப்பகுதி நிலத்தை கையகப்படுத்துவதால், பள்ளியை இங்கு தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு படித்த மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை ஏற்பாடு செய்த போதிலும், அதற்கு பெற்றோர்கள் சம்மதிக்க மறுக்கின்றனர் என்றார்.
இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், பள்ளி துவங்கும் முன்பே சொல்லியிருந்தால் பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்த்திருப்போம். காலாண்டு தேர்வு துவங்க உள்ள நிலையில், பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளச் சொல்கின்றனர். பள்ளி துவங்கி மூன்று மாதங்கள் முடிந்துள்ள நிலையில், பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என புரியவில்லை.
எவ்வளவோ அரசு அலுவலகங்கள் வாடகைக் கட்டடத்தில் இயங்குகின்றன. அதேப் போன்று இந்த கல்வி ஆண்டு வரை ஏதேனும் வாடகைக் கட்டடத்தில் பள்ளியை இயக்கினால் மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்கும் என்றனர்.
No comments:
Post a Comment