தமிழகத்தில் 'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோய் பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் குழு அமைப்பதில் அரசு மருத்துவமனைகளில் தொய்வு உள்ளது.சுகாதார நலப்பணித்துறை மூலம் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும் பகுதி வாரியாக 'ஸ்கூல் ஹெல்த்' திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தின.
இதன்படி, அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களின் நோய் பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஆண், பெண் டாக்டர், நர்ஸ், மருந்தாளுனர், லேப் டெக்னீஷியன் அடங்கிய குழு நியமிக்க வேண்டும்.முதற் கட்டமாக, டாக்டர்கள் மட்டும் கடந்த 2 மாதத்திற்கு முன் நியமிக்கப்பட்டனர்.
நர்ஸ் உட்பட பிற ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.மேலும், அரசு மருத்துவக்கல்லூரி, அரசு பொது மருத்துவமனைகளில் 'ஸ்கூல் ஹெல்த்' திட்ட டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க, பொது நலம், மனநலம், கண், பல் டாக்டர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினரும் ஒருசில இடங்களில் முறையாக அமைக்கப்படவில்லை. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிகிச்சைக்கு செல்கின்றனர். அங்கு சிறப்பு மருத்துவக் குழு இல்லாததால் மாணவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்காத நிலை உள்ளது என, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சிறப்பு டாக்டர் குழு தயார் நிலையில் உள்ளன. இல்லாத இடங்களில் விரைவில் ஏற்பாடு செய்யப்படும். 7 ஆயிரம் நர்ஸ்கள் புதிதாக தேர்வாகியுள்ளனர். அதில் இத்திட்டத்திற்கான நர்ஸ்கள் விரைவில் நியமிக்கப்படுவர். இத்திட்டத்தால் 10 ஆண்டுகளில் நல்ல பயன் கிடைக்கும்,” என்றார்.
No comments:
Post a Comment