பின் தங்கிய அரசு பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க, மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் 100 மணி நேரம் வகுப்பு எடுக்கப் போகின்றனர்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர்., (கவுன்சில் ஆப் சயின்டிபிக் அன்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்) செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் 38 ஆராய்ச்சி கூடங்கள் உள்ளன. இதில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து தொழில்துறை நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் வழங்கி வருகின்றனர். இவர்களின் கண்டுபிடிப்புகளை படித்தவர்களால் மட்டுமே அறிய முடிந்தது.கிராமப்புற மாணவர்கள் விஞ்ஞான அறிவில் சிறந்து விளங்க வேண்டும், என்பதற்காக, மத்தியஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, இந்தியா முழுவதும் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்., விஞ்ஞானிகள் ஆண்டுக்கு 100 மணி நேரம், பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வகுப்பு எடுக்கப்போகும் விஞ்ஞானிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றன.காரைக்குடி 'சிக்ரி' விஞ்ஞானி மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: 10 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், அறிவியலை மார்க் வாங்குவதற்கு மட்டுமே படிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு சிந்திக்கும் திறனின்றி போகிறது. மேலும் கல்லூரிகளில் அறிவியல் படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனவே கிராமப்புற பள்ளி அளவில், விஞ்ஞானிகளை உருவாக்கும் முயற்சியில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.அதன் ஒரு கட்டமாக, காரைக்குடி 'சிக்ரி' விஞ்ஞானிகள் கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று, இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் தொழில் கல்வி என எந்த துறையில் அவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்களோ, அத்துறை குறித்து விளக்கம் அளிக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பாடத்துடன், கூடுதலாக தாங்கள் செய்து வரும் ஆராய்ச்சி, அதனால் ஏற்படும் சமூக பலன், விஞ்ஞான துறையின் எதிர்காலம், அதில் உள்ள படிப்புகள், விஞ்ஞானம் மனித வாழ்வில் எவ்வாறு பயன்படுகிறது, என்பது குறித்து கற்று கொடுக்க உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் கற்றுக்கொடுக்க 'சிக்ரி'யில் 114 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், என்றார்.
No comments:
Post a Comment