பதினெட்டு வயது பூர்த்தியடைந்த கல்லுாரி மாணவர்கள் ஆன்-லைன் மூலமாக புதிய வாக்காளர்களாக சேர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 8 லட்சத்து 97 ஆயிரத்து 500 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 18 வயது பூர்த்தியடைந்த 39 ஆயிரம் புதிய வாக்காளர்களை கண்டறிந்து, புகைப்பட அடையாள அட்டை வழங்க மாநில தேர்தல் துறை திட்டமிட்டுள்ளது.
கல்லுாரி மாணவர்கள் புதிய வாக்காளர்களாக சேர சேர்க்கை படிவம் வழங்கும் விழா, கோரிமேடு அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மையத்தில் நேற்று நடந்தது. புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு, 18 வயது பூர்த்தியமடைந்த மாணவர்களுக்கு வாக்காளர் சேர்க்கை படிவத்தை வழங்கி வாழ்த்தினார்.
கலெக்டர் மணிகண்டன், இணை முதன்மை தேர்தல் அதிகாரி ரவிதீப் சிங் சாகர், கலை பண்பாட்டு துறை செயலர் முத்தம்மா, துணை தேர்தல் அதிகாரி ஸ்ரீதர், அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மைய டீன் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லுாரி உதவி மையம்: 18 வயது பூர்த்தியடைந்த கல்லுாரி மாணவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்ந்து புகைப்பட அடையாள அட்டை பெற கல்லுாரிகளில் யுவர் வாய்ஸ் உதவி மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதற்கான பேராசிரியர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் கல்லுாரி மாணவர்கள் வாக்காளர் படிவம்-6 பெற்று, கேட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்து புகைப்பட அடையாள அட்டை பெறலாம்.
கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், பணியில் உள்ளவர்கள் www.ceopuducherry.py.gov.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். தங்களுடைய புகைப்படம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டையை ஸ்கேன் செய்து 20 கே.பிக்கு மிகாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிட்ட கையோடு இன்று 15ம் தேதி முதல் அடுத்த மாதம் 14ம் தேதி வரை அந்தந்த பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 18 வயது பூர்த்தியடைந்த கல்லுாரி மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து கொடுத்து, புதிய வாக்காளர்களாக சேரலாம்.
இந்த வாய்ப்பினை தவற விட்டவர்கள் இம்மாதம் 20ம் தேதி, அடுத்த மாதம் 4ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடக்கும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி புகைப்பட வாக்காளர் அட்டையை பெறலாம்.
No comments:
Post a Comment