கல்லூரிப் பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார்.சட்டப் பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய ஒசூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஜே.கோபிநாத், ""புதிதாகத் தொடங்கப்பட்ட ஒசூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கௌரவப் பேராசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். மேலும், கல்லூரி 2-ஆவது "ஷிஃப்ட்'டில் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது. எனவே, விரைவில் முழுநேரப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்'' என்றார்.
இதற்குப் பதிலளித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பேசியது:அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. எனவே, ஒசூர் அரசுக் கல்லூரிக்கு முழுநேரப் பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட்டு விடுவர் என்றார்.பின்னர் மீண்டும் இதே கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ""தமிழக அரசு உத்தரவின் பேரில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் தேர்வு செய்யப்பட்டு நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள 1,007 உதவிப் பேராசிரியர்களில் 5 பேர் ஒசூர் அரசுக் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.
No comments:
Post a Comment