சிவில் சர்வீஸ் தேர்வைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்விலும், தமிழ் மொழி பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இது, கிராமப்புற தேர்வர்களுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கு, மத்திய அரசு நடத்தும், சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளில் (மெயின் தேர்வு), சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதில், பிராந்திய மொழிகளில் தேர்வெழுத, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, குறிப்பிட்ட பிராந்திய மொழியில், பிரதான தேர்வை எழுத வேண்டும் எனில், குறைந்தபட்சம், 25 பேர், அதற்கு முந்தைய தேர்வான, முதல் நிலைத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு குறைவானவர்கள், முதல்நிலைத் தேர்வில், தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்கள், தங்கள் தாய்மொழியில், பிரதான தேர்வை எழுத முடியாது.
தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே, இந்த பாடத்தை, விருப்ப பாடமாக எடுக்க முடியும். மேலும், தமிழ் வழியில், பட்டப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே, தமிழ் வழியில் தேர்வை எழுத முடியும். இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி.,யும், தமிழ் மொழி பாடத்திற்கான முக்கியத்துவத்தை குறைத்து, புதிய பாடத்திட்டத்தில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. பல லட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும், குரூப்-4 தேர்வில், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என, இரு பிரிவுகளின் கீழ், 100 கேள்விகளும், பொது அறிவுக்கு, 100 கேள்விகளும் தரப்படும்.
இதில், பெரும்பான்மையான தேர்வர்கள், பொதுத்தமிழ் பிரிவில், விடை அளிப்பர். ஒவ்வொரு கேள்விக்கும், தலா ஒன்றரை மதிப்பெண்கள் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடத்தப்படுகிறது. புதிய பாடத் திட்டத்தின்படி, மொழிப்பாடங்களுக்கான கேள்விகள், 100ல் இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மீதியுள்ள, 150 கேள்விகளும், பொது அறிவு பகுதியில் இடம்பெறும். குறைக்கப்பட்ட 50 கேள்விகளும், சிந்தித்து விடை அளிக்கும் வகையில், புதிய பகுதி கேள்விகளாக, பொது அறிவு கேள்விகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. தமிழ் மொழி பகுதியில் இருந்து, 50 கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம், 75 மதிப்பெண்கள், தேர்வர்களுக்கு பறிபோய் உள்ளது.
No comments:
Post a Comment