Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, March 7, 2013

    10, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகி விட்டது. உச்சபட்ச பரபரப்பில் மாணவர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

    அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் நெருக்கடி. பொதுத்தேர்வு என்பது, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது என்றால், தனியார் பள்ளிகளில் பள்ளியின் எதிர் காலத்தையே தீர்மானிக்கிறது. அந்த வகையிலும் குழந்தைகளுக்கே கூடுதல் சுமை...
    கல்வி, வாழ்க்கைக்கானது என்ற நிலை மாறி, மதிப்பெண்ணுக்கானது என்ற நிலை வந்தபிறகு, கொஞ்சநஞ்சம் நியாயங்களும் அடிபட்டுப் போய்விட்டன. அரசுப் பள்ளிகளில் யாருக்கும் பெரிய எதிர்பார்ப்பில்லை. அரசு வகுத்துத்தந்த திட்டப்படி பாடங்களை நடத்திவிட்டு, திருப்புதல் தேர்வு, மாடல் தேர்வுகள் நடந்து வருகின்றன. தனியார் பள்ளிகளின் கல்வித் திட்டமோ வேறு மாதிரியானது.

    ‘குங்குமம் தோழி’ வாசகி, சென்னை மகாலட்சுமி இன்றைய தனியார் பள்ளிகளின் கல்விநிலையை கவலையோடு பகிர்ந்து கொள்கிறார்.‘‘எங்க பக்கத்து வீட்டுப்பையனை, நாமக்கல்ல ஒரு பிரபல தனியார் பள்ளியில லட்சக்கணக்குல செலவு பண்ணி 9ம் வகுப்பு சேத்துவிட்டாங்க. 9ம் வகுப்பு புத்தகங்கள் கொடுத்ததோட சரி... முழுக்க முழுக்க பத்தாம் வகுப்பு பாடங்களை நடத்தத் தொடங்கிட்டாங்க. பத்தாம் வகுப்புல 460 மார்க் எடுத்தான். அதேபோல, 11ம் வகுப்பு பாடங்களை நடத்தவே இல்லை. 12ம் வகுப்பு நடத்த ஆரம்பிச்சிட்டாங்க.

    இதுபத்தி அவங்க பேரன்ட்ஸ், மீட்டிங்ல கேட்டதுக்கு உங்க பிள்ளையோட எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போறது மார்க்தான். 9ம் வகுப்பும், பிளஸ் ஒன்னும் பெரிய விஷயமில்லை. அது பள்ளிக்குள்ளயே முடிஞ்சு போற விஷயம்... அதை நாங்க பாத்துக்கிறோம்... பொதுத்தேர்வுதான் முக்கியம்’னு சொல்லி அனுப்பிட்டாங்க. பிளஸ்டூவில 1,140 மார்க் எடுத்தான். கணக்குல சென்டம்... ஸ்கூல் தேர்ட் வேற. அண்ணா பல்கலைக்கழகத்துல இன்ஜினியரிங் சீட் கிடைச்சுச்சு. ஆனா, முதல் செமஸ்டர்லயே 3 அரியர். கணக்கு பாடம் ரொம்ப கஷ்டமா இருக்கும்மான்னு சொல்லி அழுறான்.

    ஸ்கூல்ல தேர்ட் ரேங்க் எடுத்து, கணக்குல சென்டம் வாங்குன பையனால இன்ஜினியரிங் கணக்குகளை பேலன்ஸ் பண்ண முடியலே... என்று வருந்துகிறார் மகாலட்சுமி. ‘உண்மைதான்... மகாலட்சுமி குறிப்பிடுகிற அந்த ஒரு மாணவன் மட்டுமல்ல... மதிப்பெண்களை மட்டுமே குறிவைத்து தயாரிக்கப்படுகிற எல்லா மாணவர்களுமே இப்படியான சவால்களை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது’ என்கிறார்கள் கல்வியாளர்கள்.
    மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் இதுபற்றி கவலையோடு பேசுகிறார்...

    ‘‘இன்றைக்கு தமிழக கல்விச்சூழலில் நிலவுகிற மிகப்பெரிய அபாயம் இது. முறைகேடும் கூட. பிளஸ்டூவில் கணக்கில் 200க்கு 200 வாங்கிய ஒரு மாணவன், இன்ஜினியரிங்கில் தடுமாறுகிறான். இதற்குக் காரணம், மாணவனை மதிப்பெண் பொரிக்கிற இயந்திரமாகவே வார்க்கிறார்கள். அவனுடைய சிந்திக்கும் திறனை மேம்படுத்தாமல், மனப்பாடம் என்ற பெயரில் பாடத்தைக் கசக்கி மூளையில் திணிக்கிறார்கள். அதனால் அந்தக்குழந்தை படித்த மக்காக வளர்கிறது.

    தனியார் பள்ளிகள் சர்வசாதாரணமாக அரசின் விதிகளை மீறுகிறார்கள். மத்திய அரசின் கல்வி உரிமைச்சட்டப்படி, பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு நுழைவுத் தேர்வோ, நேர்முகத்தேர்வோ நடத்தக்கூடாது. அப்படி நடத்தும் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்யலாம். ஆனால், ஒரு தனியார் பள்ளி, ஒரு பெரிய பத்திரிகையில், ஒண்ணாம் வகுப்புக்கு அட்மிஷன் டெஸ்ட் வைப்பதாக விளம்பரம் கொடுக்கிறது. என்ன தைரியம் இது? அந்தப் பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?

    பிளஸ் ஒன், பிளஸ் டூ என்பது தனித்தனி வகுப்பல்ல... ஒரு கோர்ஸ். இரண்டிலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பாடங்கள் இருக்கின்றன. கல்லூரியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவனை நேரடியாக மூன்றாம் ஆண்டுக்குரிய தேர்வை எழுதச் சொல்வது எப்படி அபத்தமோ, அதுபோன்ற அபத்தம்தான் பிளஸ் ஒன் நடத்தாமல் பிளஸ் டூ நடத்துவதும்.

    எங்கள் காலத்தில், பிளஸ் ஒன், பிளஸ் டூ எல்லாம் இல்லை. இன்டர்மீடியட் என்று ஒரு படிப்பு இருந்தது. 11 வருடம் பள்ளியில் படிக்க வேண்டும். 2 வருடம் இன்டர்மீடியட். அதை முடித்தால்தான் கல்லூரியில் சேரமுடியும். கல்லூரியில் இளங்கலைப் படிப்பு 2 வருடம்தான். ஒரு மாணவன் இளங்கலை முடிக்க 15 வருடம் ஆகும். இப்போதும் 15 வருடம்தான். ஆனால், இளங்கலை படிப்பை 3 வருடமாக்கி, பள்ளிப்படிப்பை 12 வருடங்களாக மாற்றியிருக்கிறார்கள். தனியார் பள்ளிகள் இந்த செட்டப்பையே குலைக்கிறார்கள்.

    நம் கல்வித் திட்டம் மட்டுமல்ல... உலகளாவிய கல்வித் திட்டங்கள் அனைத்தும் படிப்படியான வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டவை. ஒன்றாம் வகுப்பு படித்தால்தான் இரண்டாம் வகுப்பின் பாடங்கள் புரியும். ஒன்ப தாம் வகுப்பு படித்தால்தான் பத்தாம் வகுப்பு பாடங்களை உள்வாங்க முடியும். கல்வி வணிகமயமான பிறகு மதிப்பெண்களே முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. பள்ளியை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்ய மதிப்பெண்கள் அவசியமாக இருக்கிறது. அதற்காக மாணவர்களின் கற்றல் திறனை குலைத்து, தடுமாற வைக்கிறார்கள். இது உரிமை மீறல்...Ó என்று கோபமாகப் பேசுகிறார் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.

    ‘கல்வி தனியார்மயமான பிறகு, படிப்பது எதற்காக என்ற கேள்விக்கான பதிலே திரிந்துபோய்விட்டது’ என்று வருந்துகிறார் கல்வியாளர் செந்தில்குமார்.
    ‘‘கல்வி, மதிப்பெண்ணோடு மட்டும் தொடர்புடையதல்ல... வாழ்க்கையோடு தொடர்புடையது. தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை நோக்கி மட்டுமே மாணவர்களை விரட்டுகின்றன. படிக்கிற ஒவ்வொரு பாடத்துக்கும் வாழ்க்கையோடு தொடர்பு இருக்கிறது. ஒளியைப் பற்றி ஆறாம் வகுப்பு தொடங்கி, பத்தாம் வகுப்பு வரை எல்லா வகுப்புகளிலும் பாடம் இருக்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கிற மாணவன், நேரடியாக பத்தாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள ஒளியைப் படித்தால் அவனால் புரிந்து கொள்ளமுடியாது.

    அவனது உளவியல் தன்மை, கற்றல் தன்மை, கவனிக்கும் திறன் எல்லாவற்றையும் கணக்கிட்டு, அந்த சின்ன மூளைக்கு எவ்வளவு தகுமோ அந்த அளவுக்கு, அவனது பால்யத்தை காயப்படுத்தாத அளவுக்கு கற்றுத்தரும் வகையில் பாடப்புத்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘ஒளி என்றால் என்ன?’ என்று அறிமுகப்படுத்தி, அதன் பயனை விளக்கி, அதன் ஆதி அந்தங்களை படிப்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள் தெரிந்தோ, தெரியாமலோ மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகின்றன.

    பெஞ்சமின் ப்ளூம் என்பவர் அறிமுகப்படுத்திய ப்ளூம்’ஸ் டெக்ஸானமி என்ற கொள்கையின் அடிப்படையில்தான் நம் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பாடங்கள், மாணவனின் சிந்தனையைத் தூண்டி சுயமாக இயங்கச் செய்ய வேண்டும். இதுதான் பெஞ்ச மின் கொள்கையின் அடிப்படை. அதற்காக சில விதிமுறைகளை வகுத்திருக்கிறார். முதலில் நாலெட்ஜ். அதாவது, அறிவு. பொருள் புரிகிறதோ இல்லையோ, செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் முதல்படி. இரண்டாவது படி, புரிந்து கொள்வது. எதையெல்லாம் தெரிந்து கொண்டானோ, அந்த
    செய்திகளை எல்லாம் புரிந்து கொள்வது.

    மூன்றாவது நிலை, செயல்படுத்துவது. புரிந்து கொண்டு செயல்படுத்தும் நிலை. நான்காவது, பகுத்துப் பார்த்தல். இது எப்படி நடக்கிறது என்று பகுத்துப் பார்த்து புரிந்து கொள்வது. 5வது நிலை, மாற்றுச் சிந்தனை. ஒரு செயலை இப்படி செய்வதற்குப் பதிலாக ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது என்ற மாற்று சிந்தனையை வளர்ப்பது... ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளை எழுப்பி, விடைதேடச் செய்யும் நிலை இது. இறுதி நிலை, எவாலியூஷன். இப்படியும் செய்ய முடியும் என்று மாணவனே இயங்குவது... இதுதான் ப்ளூம்’ஸ் டெக்ஸானமி தியரி. உலகமே ஏற்றுக்கொண்ட இந்த தியரியை எந்த முகாந்திரமும் மாற்றுத்திட்டமும் இல்லாமல் தனியார் பள்ளிகள் மீறுகின்றன.

    குழந்தைகள் இயல்பாக கற்றுக்கொள்ள வேண்டியவற்றை மறுத்து, அவர்களை சக்திக்கு மீறி திணறடிக்கிறார்கள். இது மாணவர்களை உளவியல் பிரச்னைகளை நோக்கி உந்தித் தள்ளுகிறது... என்கிற செந்தில்குமார், பெற்றோரின் புரிதலின்மையையும் சுட்டிக்காட்டுகிறார். ‘‘கால்கடுக்க வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கி, பணத்தைக் கொட்டி பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட்டால் போதும், தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று பல பெற்றோர் நினைக்கிறார்கள். நடுத்தர குடும்பத்துப் பெற்றோர்கூட தங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளியில் படித்தால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.

    அதற்காக எவ்வளவு கடன்படவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு உண்மையை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அறிவுக்கும் சிந்தனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கல்வி என்பது அறிவு. அது சிந்தனையை தூண்ட வேண்டும். ஆனால், சிந்தனையை மழுங்கடித்து, மனப்பாடச் சரக்காக கல்வியை குழந்தையின் மூளைக்குள் இறக்குவதால் எந்தப் பயனும் இல்லை. சிபிஎஸ்இ, மெட்ரிக் என வார்த்தைகளில் பெற்றோர் மயங்குகிறார்கள். அந்த பாடத்திட்டங்களின் உள்ளடக்கம் என்ன என்பதை அறிய பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை.

    குழந்தையைப் பற்றியும், அவர்களின் மனநிலை பற்றியும் கவலைப்படுவதில்லை. குழந்தையின் திறமையை அறிந்து அதை நோக்கி அவர்கள் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு. பல பெற்றோர்கள், குழந்தையின் மேல் முடிவுகளையும் கனவு களையும் ஆசைகளையும் திணிக்கிறார்கள். மெட்ரிக் பள்ளியில் படித்தால்தான் ஐ.ஐ.டி தேர்வு எழுதலாம். மருத்துவராகலாம், இன்ஜினியராகலாம் என்று நம்புகிறார்கள். உண்மையில் இது மூடநம்பிக்கை. உலகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறைகள் உண்டு.

    மருத்துவம் சார்ந்து மட்டும் 150க்கும் மேற்பட்ட துறைகள் இருக்கின்றன. உலகத்தில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது. பெற்றோர் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்... என்கிறார் செந்தில்குமார். அறந்தாங்கி, ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சேக்சுல்தானிடம் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினோம். தனியார் பள்ளிகள் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார் அவர்.‘‘மொத்தமுள்ள 6 ஆயிரம் தனியார் பள்ளிகளில் சிலநூறு பள்ளிகளில் அப்படிப்பட்ட தவறுகள் நடக்கலாம். ஒட்டுமொத்தமாக அப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்ல முடியாது. 9ம் வகுப்பு அடிப்படை புரியாமல் 10ம் வகுப்பு தேர்வெழுதுகிற ஒரு மாணவனால் நிச்சயமாக நல்ல மதிப்பெண்களை பெற முடியாது.

    அப்படித்தான் 11ம் வகுப்பும். 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு படிக்காமல் பிளஸ் டூ முடிக்கிற மாணவனால் மேற்படிப்புகளில் சாதிக்க முடியாது.
    பள்ளிகளை குற்றம் சாட்டுவதற்கு முன்பு நீங்கள் பெற்றோர் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். எல்லோருமே தங்கள் பிள்ளை அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான் வருகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே பள்ளிகள் செயல்பட வேண்டியிருக்கிறது. அறந்தாங்கியில் ஆறேழு தனியார் பள்ளிகள் உள்ளன.

    அவற்றில் பிளஸ்டூ படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சில நூறுகள்தான் இருக்கும். அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காக மாவட்டம் கடந்து பிள்ளைகளை கொண்டு சேர்க்கிறார்கள். இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிமாவட்டங்களில் படிக்கிறார்கள். ‘பிள்ளையை எப்படியும் நடத்தலாம்... மதிப்பெண்களே முக்கியம் என்ற மனநிலையில் பெற்றோர் இருக்கும்போது எங்களைப் போன்றவர்கள் என்ன செய்யமுடியும்?

    அதுபோன்ற பள்ளிகளில் எது பகல், எது இரவு, எது பள்ளி, எது ஹாஸ்டல் என்று வித்தியாசமே தெரியாத அளவுக்கு எப்போதும் படி படி... எழுது, எழுது... என்று வதைக்கிறார்கள். அதுமாதிரி, மதிப்பெண்களுக்காகவே படித்துவிட்டு வருகிற மாணவர்கள் மேற்படிப்பில் திணறு கிறார்கள். உளவியல் சிக்கலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறார்கள். சிலர் பொத்தாம்பொதுவாக எல்லா தனியார் பள்ளிகளையும் போகிற போக்கில் குறை சொல்கிறார்கள். உண்மையில், எங்களுக்கும் சமூக நோக்கமும், மாணவர்களின் எதிர் காலத்தின் மேல் அக்கறையும் இருக்கிறது... என்கிற சேக்சுல்தான், இன்னொரு நியாயத்தையும் நம் முன் எடுத்து வைக்கிறார்.

    ‘‘தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவது மட்டும்தான் வேலை. வேறு வேலை எதுவும் நாங்கள் கொடுப்பதில்லை. மீட்டிங், பயிற்சி, சென்சஸ் என்று எதற்காகவும் அவர்களை அனுப்புவதில்லை. ஒன்பதரை மணிக்கு பள்ளிக்கு வரும் ஆசிரியர், நாலரை மணி வரை பள்ளியிலேயே இருக்கிறார். அதனால் அவரால் திட்டமிட்டு பாடங்களை நடத்தமுடிகிறது. 11ம் வகுப்பைப் பொறுத்தவரை டிசம்பருடன் முழுப்பாடங்களையும் நடத்தி முடித்து விடுகிறார்கள். அதற்குப் பிறகு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வேறு வேலை இல்லை. அதனால் பிளஸ்டூ பாடம் நடத்துவதுண்டு. அதில் எந்தத் தவறும் இல்லை.

    இப்போது சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் வந்துவிட்டன. மெட்ரிக் பாடங்களோடு ஒப்பிடுகையில் அவை மிக மிக எளிதாகவே இருக்கிறது. எல்கேஜி, யூகேஜியிலேயே நாங்கள் குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் பயிற்றுவித்து விடுகிறோம். ஆனால், ஒன்றாம் வகுப்பு சமச்சீர் பாடத்தில் மீண்டும் குழந்தைகள் அதையே செய்ய வேண்டியிருக்கிறது. அந்தச்சூழலில் நாங்கள் என்ன செய்யமுடியும்? வேறு சில பயிற்சிகளையோ, பாடங்களையோ நடத்த வேண்டியிருக்கிறது. பிரச்னைகளை புரிந்துகொள்ளாமல் தனியார் பள்ளி நடத்துபவர்களை சமூக விரோதிகள் போல பேசுவது சரியல்ல... என்கிறார் சேக்சுல்தான். எது சரி, எது தவறு என்பதை காலம் தீர்மானிக்கும்!

    No comments: