'பிளஸ் 2 தேர்வில், இரட்டை திருத்த முறை கொண்டு வராவிட்டால், போராட்டம் நடத்துவோம்' என, விடை திருத்தும், ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு வந்த பின், பல மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டின் மூலம், கூடுதல் மதிப்பெண் பெறுகின்றனர். அதனால், மதிப்பெண் வித்தியாசம் உள்ள விடைத்தாளை திருத்திய ஆசிரியர்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தி, தண்டனை அளிக்கின்றனர். இந்நிலையில், திருத்த முறையில் மாற்றம் கொண்டு வராவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என, ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
பஸ் வசதியில்லைஇது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது:தினமும், 24 விடைத்தாள்களை திருத்த வேண்டும். காலை, 8:00 முதல், இரவு, 10:00 மணி வரை, திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. பஸ் வசதி இன்றி, இரவு, 12:00 மணிக்கு வீட்டிற்கு செல்லும் ஆசிரியர்கள், மறு நாள் காலை, 6:00 மணிக்கு புறப்பட்டு, தேர்வு மையம் வர வேண்டும்.
அதனால், மன அழுத்தம் மற்றும் துாக்கமின்மையால், திருத்தத்தில் தவறுகள் ஏற்பட்டு, மதிப்பெண்ணில் வித்தியாசம் ஏற்படுகிறது. விடைத்தாள் எண்ணிக்கையை, 20 ஆக குறைத்தால், திருத்தும் நேரமும், தவறுகளும் குறையும்.
விடை திருத்தும் மையங்களில், குடிநீர், மின் விளக்கு வசதிகள் இருப்பதில்லை. பல இடங்களில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விடை திருத்தம் நடக்கிறது. அடிப்படை வசதி கொண்ட பள்ளிகளில், திருத்தும் மையங்கள் அமைக்க வேண்டும்.
தவறு சரியாகும்வேலைப்பளு மற்றும் அடிப்படை வசதி குறைவால், சிறிய மனித தவறுகள் நிகழ்ந்து, மதிப்பெண்ணில் வித்தியாசம் ஏற்படுகிறது. விடை திருத்தத்தில், இரட்டை திருத்த முறை கொண்டு வந்தால், 100 சதவீதம், தவறுகள் சரி செய்யப்படும்.
இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளை சந்திக்க மனு அளித்தும், அனுமதி கிடைக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியம் தொடர்ந்தால், மாணவர் நலனுக்காக, ஆசிரியர்கள் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment