மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை; சில தினங்களுக்கு முன், பிரதமர் மோடி, வீட்டு வசதி கடனுக்கு அறிவித்த வட்டிச் சலுகைகள் ஆகியவற்றால், வீடு விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த ஆண்டு, நவ., 8 – டிச., 10 வரை, வங்கிகளிடம், 12.44 லட்சம் கோடி ரூபாய் குவிந்துள்ளது. இதனால், நடப்பு நிதி ஆண்டில், வங்கிகளின், ‘டிபாசிட்’ வளர்ச்சி, 13.6 சதவீதம் அதிகரித்து, 105.90 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், கடன் வளர்ச்சி, 1.2 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக, தொழில் துறையின் கடன் வளர்ச்சி, 5.5 சதவீதம் சரிவடைந்து உள்ளது. அது போல, வீட்டு வசதி மற்றும் வேளாண் துறைகளின் கடன் வளர்ச்சி, முறையே, 9.9 சதவீதம் மற்றும் 2.2 சதவீதம் குறைந்துள்ளது. அதனால், வங்கிகள், வட்டியை குறைத்து, தாராளமாக கடன் வழங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி, தன் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி யில், வீடு, தொழில், வேளாண் துறைகளுக்கு, பல்வேறு சலுகைகளை அறிவித்தார். வீட்டு வசதி கடனுக்கு, 4 சதவீத வட்டி மானியம், விவசாயிகளுக்கு, 60 நாள் வட்டி தள்ளுபடி, சிறிய, நடுத்தர நிறுவன கடன் வரம்பு, 1 கோடி ரூபாயில் இருந்து, 2 கோடி ரூபாயாக உயர்வு என, அவர் அறிவித்த சலுகைகள், அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளன. இத்தகைய சாதகமான சூழலை பயன்படுத்தி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளிட்ட பெரும்பான்மையான வங்கிகள், கடனுக்கான வட்டியை, கால அளவின் அடிப்படையில், 0.60 – 1.48 சதவீதம் வரை அதிரடியாக குறைத்துள்ளன. இதனால், சில ஆண்டுகளாக, மந்த நிலையில் உள்ள வீட்டு வசதி துறை, எழுச்சி காணும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ராஜீவ் தல்வார், தலைமை செயல் அதிகாரி, டி.எல்.எப்.: கடந்த மூன்று ஆண்டுகளாக, வீடு விலை, 25 – 30 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது, வீட்டு வசதி கடனுக்கான வட்டி குறைந்துள்ளதால், வீடு விற்பனை அதிகரிக்கும். அன்குர் தவான், தலைமை வர்த்தக அதிகாரி, பிராப் டைகர் டாட் காம்: இது, ரியல் எஸ்டேட் துறைக்கு அளிக்கப்பட்ட, புத்தாண்டு பரிசு. வீட்டு வசதி கடன் சுமை குறையும் என்பதால், பலர் வீடுகளை வாங்க ஆர்வம் காட்டுவர். அனுஜ் பூரி, தலைவர், ஜே.எல்.எல்., இந்தியா: வீடுகளுக்கான தேவை பெருகும். குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதால், வீடு வாங்க, நீண்ட காலமாக திட்ட மிட்டு வருவோரின் கனவு நனவாகும்.
வங்கி வட்டி குறைப்பு (சதவீதத்தில்)ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - 8.15- (0.90)பஞ்சாப் நேஷனல் பேங்க் - 8.45 - (0.70)தேனா பேங்க்- 8.55 - (0.75)ஆந்திரா வங்கி - 8.65 -(0.80)யூனியன் பேங்க் ஆப் இந்தியா - 8.65 -(0.90)பந்தன் பேங்க் - 10.52 - (1.48)
No comments:
Post a Comment