ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளதால் சென்னை, மதுரை, கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிப்பதாக அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. அதேபோல் சட்டப்பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் மிகத் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், நடத்தி வரும் போராட்டம் இரண்டாவது நாளாக தீவிரமடைந்துள்ளது. மெரினாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இளைஞர் படை மெரினா நோக்கி வந்துகொண்டிருக்கிறது. 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இளைஞர்கள் குவிந்து உள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் சிலர் மண்ணில் புதைந்து கொண்டு போராட்டம் நடத்துக்கின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக சென்னை, கோவை, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும், அந்தந்த கல்லூரி நிர்வாகங்களே விடுமுறையை அறிவித்துள்ளன.
அம்பேத்கார் சட்டபல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சட்டப்பள்ளி்க்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் 22ஆம் தேதிவரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் ஜனவரி 22ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் உடனடியாக விடுதியை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment