ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றுகிறது. இதற்கான பணிகளில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். அவசரச் சட்டத்திற்கான வரைவு, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு சற்றுமுன் அனுப்பி வைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர், மேற்கு வங்கத்தில் (ஏற்கனவே வெளிநாடு என்று குறிப்பிட்டிருந்தோம். அது தவறு) சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு இரவு 10 மணியளவில் மாளிகைக்கு வருகிறார். வந்ததும், அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கான ஒப்புதலை அவர் வழங்குவார் என்று, குடியரசுத்தலைவர் மாளிகை மற்றும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தமிழகத்தில வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு 99% வாய்ப்பு இருப்பதாகவே தெரியவந்துள்ளது. இதற்கு யாராவது தடை வாங்க மாட்டார்களா? பீட்டா எதிர்க்காதா? என்றால், அதற்கும் மத்திய அரசு உதவி செய்திருக்கிறது.
இன்று காலை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்பை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
புன்னகைத்த நீதிபதி
மக்கள் விரும்புவதை நிறைவேற்றும் வகையில், மாநில அரசு ஒரு முடிவு எடுக்கிறது. அதற்கு மத்திய அரசு துணை புரிகிறது. எனவே தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று அவர் கோரினார். அப்போது நீதிபதி மிஸ்ரா லேசாக புன்னகைத்து விட்டு, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். எனவே, ஒரு வாரத்திற்குள் அவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. தடை கேட்டு நீதிமன்றத்தை யாராவது அணுகினால், ஒரு வாரம் கழித்துதான் எதுவும் என்று நீதிபதிகள் தெரிவிப்பார்கள், என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். எனவே, மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்ற ஆதரவுடன், தமிழகத்தில் அவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடப்பது சாத்தியமாகியிருக்கிறது என்றே சட்ட நிபுணர்கள், அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment