ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் அதன் உறுப்பினர்கள் சிலருக்கு உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கும் சட்டத் திருத்தத்தை தமிழக சட்டப்பேரவை அண்மையில் நிறைவேற்றியது. முன்னதாக, இது தொடர்பான அவசரச் சட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வந்தது.
இந்நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினர் அஞ்சலி சர்மா உள்ளிட்ட சிலர், தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாயின. இந்நிலையில் அஞ்சலி சர்மாவுக்கு, வாரியத்தின் செயலர் ரவிக்குமார் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் தொடர்பான விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாரியத்தின் உறுப்பினர்கள் சிலர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. அத்தகைய மனுக்களை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தால் உடனடியாக அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.
ஜல்லிக்கட்டு தொடர்புடைய நீதிமன்ற வழக்குகளில் வாரியம் சார்பில் எந்தவொரு மனுவையும் தாக்கல் செய்யும் முன்பாக முறைப்படி வாரியத்தின் ஒப்புதலை உறுப்பினர்கள் பெறுவது அவசியம்' என்று குறிப்பிட்டுள்ளார். தெரு நாய்கள் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதில் இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் மனு தாக்கல் செய்வதற்கான வக்காலத்து அனுமதி, வாரியத்தின் உறுப்பினர் அஞ்சலி சர்மாவுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த அனுமதியை அடிப்படையாக வைத்து, அஞ்சலி சர்மா சார்பில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் விலங்குகள் நல வாரியத்தின் செயலரை தவறாக வழிநடத்தி அவரது அனுமதியை அஞ்சலி சர்மா பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவரது பெயரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்க முகாந்திரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே, ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் தனியார் தன்னார்வ பிராணிகள் நல அமைப்பான "பீட்டா' சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், இத்தகவலை திட்டவட்டமாக அபிஷேக் மனு சிங்வி மறுத்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி தற்போது மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அக்கட்சியில் அங்கம் வகிக்கும் அபிஷேக் மனு சிங்வி, "கட்சிக் கொள்கைக்கு முரணான விஷயங்களில் தலையிடக் கூடாது' என்று காங்கிரஸ் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும், அதன் பேரிலேயே அவர் "பீட்டா' சார்பில் ஆஜராகவில்லை என்று மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment