தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல், வாழ்வியல்திறன், கட்டிடவியல் உள்ளிட்ட பாடங்களை 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பகுதிநேரமாக கற்பிக்க 2012-ஆம் ஆண்டு ரூ.5000/- தொகுப்பூதியத்தில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். வாரத்திற்கு 3 அரைநாள்கள் வீதம், ஒரு மாதத்தில் 12 அரைநாள்கள் பணியாற்ற பணிக்கப்பட்டனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் அனைத்து வகைப் பணிப் பிரிவினருக்கும் ஊதிய உயர்வு வழங்கியபோது, முதல் முறையாக பகுதிநேர ஆசிரியர்களுக்கும் (2014 ஏப்ரல் முதல்) ரூ.2000/- ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.7000/- வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. பண்டிகை கால ஊக்கத்தொகை, பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ஆகியவை வழங்கப்படவில்லை. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட்டுவருகிறது.
மகளிர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. பணி நியமனம் மற்றும் பணி நிரவலின்போது தொலைதூரப் பள்ளிகளுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்களுக்கு இதுவரை அருகிலுள்ள பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது:
14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 16549 பகுதிநேர ஆசிரியர்களுக்கும் ஓராண்டுக்கு 12 மாதங்களுக்கான ஊதியத்தைக் கணக்கிட்டு அறிவித்ததை அமுல்படுத்த வேண்டும். 2012ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒவ்வொரு வருடமும் 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மே மாதங்களின் தொகுப்பூதியத் தொகையான ரூ.51 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்தை பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்க துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவா மாநிலத்தில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.1500, ஹரியானாவில் ரூ.10000 வீதம் வழங்கப்படுகிறது. மேலும், கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் வேலை வழங்கப்பட்டு, கூடுதல் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. எனவே, அதே நடைமுறையை தமிழகத்திலும் அமுல்படுத்த வேண்டும். பகுதிநேர பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த ஆண்டுக்கு ரூ.400 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜாக்டோ அமைப்பின் போராட்டங்களின்போது பள்ளிகளை இயக்க அரசின் உத்தரவுப்படி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட 15000க்கும் மேற்பட்ட பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு, பகுதிநேரப் பயிற்றுநர்களின் தொடர் கோரிக்கையான முழுநேரப் பணி வழங்கவில்லை. மேலும் டாஸ்மாக், ஊரக வளர்ச்சி துறை வட்டார வளர்ச்சி அலுவலக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட கணினி இயக்குபவர்களைப் போல பல்வேறு துறைகளில் உள்ள தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டுவருகிறது. எனவே, பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு 2011-12ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
சமவேலை – சம ஊதியம் என்ற தத்துவத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.ஹெகர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் பஞ்சாப் மாநில ஒப்பந்த தொழிலாளிக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை, மத்திய – மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒரே கல்வித் தகுதியில் உள்ளவர்களில் இருவேறு நிலைகளில் பணிமர்த்தி, ஒரு பிரிவினர் அரசு சலுகைகளுடன் சிறப்பாசிரியர்களாகவும், மறு பிரிவினர் ரூ.7000 தொகுப்பூதியத்தில் மத்திய அரசின் திட்ட வேலையில், ஒப்பந்த அடிப்படையில் பகுதிநேரப் பயிற்றுநர்களாகவும் பணியாற்றி வருவதை தீர்வு காண வேண்டும். ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றிய ஆசிரியர் பயிற்றுநர்களை, பணிநிரந்தரம் செய்தது போல பகுதிநேரப் பயிற்றுநர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
BY
SENTHIL@SENTHILKUMAR
9487257203
No comments:
Post a Comment