10 ரூபாய் நாணயம் செல்லாது என பரவும் புரளியை கண்டு பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து சில்லரை தட்டுப்பாட்டை போக்க பண பரிமாற்றம் செய்ய வருபவர்களுக்கு ரூபாய் நோட்டுகளுடன் 10 ரூபாய் நாணயங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களில் தயாரிப்பு ஆண்டுகளாக 2010, 2015 ஆண்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் பணத்தட்டுப்பாடு காரணமாக 2 விதமான 10 ரூபாய் நாணயங்கள் அதிகமாக புழக்கத்திற்கு வந்தன. இதில் 2010-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயம் போலியானது என்ற தகவல் பரவ ஆரம்பித்தது. இதனால் பஸ்கள், டீக்கடைகள், வர்த்தக நிறுவனங்களில் இந்த நாணயங்களை பொதுமக்களிடம் இருந்து வாங்க மறுத்து வருகின்றனர். மத்திய அரசு 10 ரூபாய் நாணயத்தையும் விரைவில் செல்லாது என்று அறிவிக்க உள்ளது என்ற செய்தியும் பரப்பப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
ஆர்பிஐ விளக்கம் :
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறுகையில், 10 ரூபாய் போலி நாணயம் புழக்கத்தில் இருப்பதாக எங்களுக்கும் புகார் வந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தினோம். ஆனால் அதில் உண்மை இல்லை. ரிசர்வ் வங்கி சார்பில் 2010-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2015-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னமும் சேர்த்து வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டது. இந்த இரண்டு வகை நாணயங்களும் செல்லுபடியாகும். புரளியை நம்ப வேண்டாம். போலி நாணயத்துடன் ஒருவர் வங்கி கிளையை அணுகினால் அதனை வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும். அதற்கு ஒரு சான்றிதழ் வழங்கிவிட்டு, போலி நாணயத்தை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர் இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தப்படும். மேலும் தகவல் தேவைப்படுபவர்கள் ரிசர்வ் வங்கியின் www.rbi.org.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment