பெரும்பாலான தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் - 2 மாணவர்களிடம், பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழுக்காக, 300 ரூபாய் வசூலிக்கின்றன. ஆனால், இந்த சான்றிதழ்கள் பெற, ஒரு பள்ளி சார்பில், மாவட்ட கல்வி அலுவலகத்தில், 300 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். இந்த பகல் கொள்ளையை தடுத்து நிறுத்த, கல்வித்துறை முன்வர வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 2 முதல், 31 வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 8 முதல், 30 வரையும் பொதுத் தேர்வுகள் நடக்கும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கான பணிகள், கல்வி அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் நடைபெறுகிறது.
தேர்வுகளை முன்வைத்து, மாவட்டத்தின் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், முறைகேடுகளில் ஈடுபடுகின்றன. குறிப்பாக, மதிப்பெண் சான்றிதழ் பெற, ஒவ்வொரு மாணவர்களிடமும், தலா, 300 ரூபாய் வசூலித்து, மொத்தமே, 300 ரூபாயை மட்டும், பள்ளி சார்பில் செலுத்துகிறது.
பொது தேர்வு
மாவட்டத்தில், 28 அரசு உதவி பெறும் உயர் நிலைப்பள்ளிகள், 152 தனியார் உயர் நிலைப்பள்ளிகள், 32 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 191 தனியார் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும், 10ம்வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, பொதுத்தேர்வு முடிந்த பின், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க, ஒவ்வொரு பள்ளியும், 300 ரூபாயை மாவட்ட கல்வி அலுவலகத்தில் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த 300 ரூபாயை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் வசூலித்து கட்ட அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், சில பள்ளிகள், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என, மிகச் சிறிய தொகையை, பள்ளி மாணவர்களிடம் வசூலிப்பதை தவிர்த்து, ஒவ்வொரு மாணவர்களிடமும், 300 ரூபாயை வசூலித்து வருகின்றன.
பெற்றோர் குமுறல்
ஒவ்வொரு பள்ளியிலும், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு மாணவரிடமும், மதிப்பெண் சான்றிதழ் கட்டண மாக, தலா, 300 ரூபாயை, பள்ளி நிர்வாகம் முறைகேடாக வசூலிப்பதன் மூலம் பல லட்சம் ரூபாயை சம்பாதிக்கின்றன.
இதுகுறித்து கேள்வி எழுப்பினால், பிள்ளைகளை தனிமைப்படுத்தி, அவர்களை பள்ளி நிர்வாகம் பழிவாங்க நேரிடும் என்பதால், பெற்றோர் அமைதி காக்கின்றனர்.
பல கட்டணம் வசூலிப்பு
மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு, அரசு பள்ளிகளும், 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நிதியிலிருந்தே அந்த கட்டணத்தை எளிதாக அரசு பள்ளி நிர்வாகம் செலுத்தி விடுகிறது.
ஆனால், தனியார் பள்ளி நிர்வாகம் நடத்தி வரும் வசூல் வேட்டை குறித்து விசாரணை நடத்த, தேர்வுத்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
ஏற்கனவே, பல்வேறு கட்டணங்கள் விதித்து, வசூலிக்கும் தனியார் பள்ளிகள், இப்போது, தேர்வு விஷயங்களிலும் முறைகேடான வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் தரப்பிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment