யூனியன் பிரதேசமாக இருப்பதால், புதுச்சேரி மாநிலத்தில் 5 ஆண்டிற்கு ’நீட்’ தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என, எஸ்.ஆர்.சுப்ரமணியம் நற்பணி இயக்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து இயக்க பொதுச்செயலாளர் பாஸ்கரன், முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு, மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கு ’நீட்’ எனப்படும் அகில இந்திய மருத்துவ தகுதி நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இதுநாள் வரையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் ’சென்டாக்’ மூலமே மருத்துவப்படிப்பிற்கு கலந்தாய்வு நடந்தது.
கடந்த ஆண்டு நீட் துழைவுத்தேர்வு புதுச்சேரி மாநிலத்தில் நடந்தபோதும், தாங்கள் புதுச்சேரி மாநில முதல்வராக பொறுப்பேற்று ’சென்டாக்’ மூலமாக மட்டுமே மாணவர்களை தேர்ந்தெடுத்து 7 தனியார் மற்றும் ஒரு அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவ சேர்க்கை நடத்தப்பட்டது.
புதுச்சேரி மாணவர்கள் ’நீட்’ நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள போதுமான அளவிற்கு தயார் நிலையில் இல்லாமல் உள்ளனர். எனவே, ’நீட்’ மூலம் சேர்க்கை நடந்தால், புதுச்சேரி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் சூழல் உருவாகும்.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் ’நீட்’ நுழைவுத்தேர்வை ரத்து செய்யவும், தள்ளி வைக்கவும் தீர்மானம் இயற்றியுள்ளார். அதையொட்டி நம் புதுச்சேரி மாநிலத்திலும் சட்டசபையை கூட்டி ஐந்தாண்டுகளுக்காவது புதுச்சேரி மாநிலத்தில் ’நீட்’ நுழைவுத்தேர்வை அனுமதிக்காத வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
புதுச்சேரி முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரின் முயற்சியால், கல்வித்தரம் தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. மேலும், ’நீட்’ நுழைவுத்தேர்வை நகர்புற மற்றும் கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை அனைத்து பள்ளிகளிலும் நடத்தி, மாணவர்களை தயார் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் புதுச்சேரி கல்லுாரிகளில் பணிபுரியும் பல்வேறு பிரிவுகளை சார்ந்த 25 ஆயிரம் ஊழியர்களின் நலன் காக்கப்பட வேண்டும்.
புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக உள்ளதால் முதலமைச்சர் போராடி, 5 ஆண்டிற்கு ’நீட்’ தேர்வை புதுச்சேரி மாநிலத்தில் தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment