போக்குவரத்து, தொலைத்தொடர்பு என அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தலைநகர் சென்னை தனித்தீவாக விடப்பட்டுள்ளது. ஏரிகளில் இருந்து திறந்து விடப்படும் வெள்ள நீர், மெல்ல மெல்ல வெள்ள பாதிப்பில்லாத இடங்களை நோக்கி சென்று வருகிறது. மொபைல் சேவை துண்டிப்பு : மழை, வெள்ளம் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு வெளியுலகம் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறுத்தம் : கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூந்தண்டலம் பாலம் உடைந்ததையடுத்து, சென்னை - புதுச்சேரி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இசிஆர், ஓஎம்ஆர், மாமல்லபுரம் சாலைகளில் வெள்ளநீர் ஆக்ரமித்துள்ளதால், இந்த பாதைகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் என காஞ்சிபுரம் எஸ்பி, அறிவுறுத்தி உள்ளார். சென்னை-திருப்பதி சாலையில் 2வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதிகை, வைகை, பாண்டியன், முத்துநகர், அனந்தபுரி உள்ளிட்ட முக்கிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் பஸ்கள் : சென்னையில் பெய்த கனமழை மற்றும் ரயில் தண்டவாளங்களில் தேங்கியுள்ள நீரின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னைக்கும் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு உதவும் வகையில், போக்குவரத்துதுறை சார்பில் சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து இன்று ( 02ம் தேதி) தென் மாவட்டங்களுக்கு 400 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
டெங்கு அபாயம்? : தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் தேங்கி உள்ளது. மழை நீருடன் கழிவுநீரும் கலந்துள்ளன. ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளநீரும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால், தண்ணீர் வெளியேற வழியில் பல அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட பல நோய்கள் பரவும் அபாய நிலையையும் சந்திக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை.
அண்ணா சாலையிலும் வெள்ளம் : அடையாற்றில் நிரம்பி வழியும் வெள்ள நீர் அண்ணாசாலையில் புகுந்துள்ளது. மெட்ரோ ரயிலுக்காக தோண்டப்பட்ட சுரங்க பாதை வழியாக அண்ணா சாலையில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் எல்டாம்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment