அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய விருதுநகர் மாவட்ட கிளையின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விருதுநகரில் நடைபெற்றது. கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக போராட்டங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கொண்டு வந்த தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் நயினா முகமதுவின் 30 ஆண்டு சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கீழ்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து விட்டு நிலையான ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தனியாக மாநில ஊதியக்குழு நியமிக்க வேண்டும். மாநில நிர்வாக தீர்ப்பாயத்தினை மீண்டும் அமைக்க வேண்டும். அமைச்சு பணியாளர்களுக்கு பணிச்சுமையினை கருத்தில் கொண்டு மேம்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் பணியாற்றும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளருக்கு தர ஊதிய உயர்வு ரூ.400 வழங்க வேண்டும்.
தொழில் வரி
அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கான தொழில்வரியை ரத்து செய்ய வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பஞ்சாயத்துக்களில் பணிபுரியும் குடிநீர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் அரசு ஊழியர்களாக கருதி உத்தரவிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
நியமனம்
அனைத்து துறைகளிலும் கணினி இயக்கும் பணியாளர்களை நியமித்து அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அடிப்படை பணியாளர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமனம் செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை மாநில வாணிப கழக பணியாளர்களாக நியமிக்க வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வரவேற்று நன்றி கூறினார்.
No comments:
Post a Comment