கொல்லிமலை ஒன்றியத்தில், பள்ளிக்கு செல்லாமல் ஏமாற்றிய இரண்டு ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தியும், அவர்கள் அதிகாரிகள் உத்தரவை மதிக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் வாழக்கை திறனை மேம்படுத்த, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக, இப்பகுதியில் உள்ள மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்ற நோக்கில், இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு பள்ளி என்ற கணக்கில், 15 நடுநிலைப்பள்ளிகள், 43 தொடக்கப்பள்ளிகள் என மொத்தம், 58 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
ஆசிரியர்கள் ஓட்டம்:
கொல்லிமலையில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பெரும்பாலான ஆசிரியர்கள், இங்கு வேலை செய்யவிரும்புவதில்லை. பணியில் சேரும் போது, கட்டாயத்தின் பேரில் மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். வேலை மாற்றம் கிடைக்கும் போது, அனைவரும் வேறு பள்ளிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்துவிடுகின்றனர். இந்நிலையில், 35 மாணவர்கள் படித்து வந்த கொல்லிமலை ஒன்றியம், எடப்புளிநாடு அடுத்த, நாயக்கன்கோம்பை அரசு தொடக்கப்பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். ஒரு சத்துணவு அமைப்பாளர், சமையலர் என மொத்தம், நான்கு பேர் வேலைபார்த்தனர். சாலை வசதி இல்லாத இந்த பள்ளிக்கு, ஆசிரியர்கள் சரியாக வராததால், இப்பகுதி மக்கள், நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்கரை உறைவிடப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்த்துவிட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு:
இதனால், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்தது. இந்தாண்டு, இரண்டு மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். இவர்களுக்கு, தலைமை ஆசிரியராக ஞானப்பிரகாசமும், ஆசிரியராக தமிழ்செல்வனும் பணியாற்றி வந்தனர். இவர்கள், சரியாக பள்ளிக்கு வருதில்லை என்ற புகாரின் பேரில் உதவி தொடக்க கல்வி அலுவலர் பிரபுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வருகைப்பதிவில் முறைகேடு:
அதில், ஆண்டுக்கணக்காக, ஒரு ஆசிரியர் மட்டுமே வேலைக்கு வந்ததும், சில சமயம் இரண்டு பேருமே பள்ளிக்கு வராமலேயே சம்பளம் வாங்கியதும், வருகைப்பதிவு முறைகேடு மூலம் தெரிந்தது. இதனால், உதவி ஆசிரியர் தமிழ்செல்வனை கே.ஊர்புரம் பள்ளிக்கு தற்காலிக இடமாற்றம் செய்தனர். ஆனால், சில நாட்கள் மட்டுமே சென்ற தமிழ்செல்வன், கே. ஊர்புரம் பள்ளிக்கும் செல்லாமல், நாயக்கன்கோம்பை பள்ளிக்கே சென்றுள்ளார். தகவலறிந்த ஏ.இ.இ.ஓ., பிரபுகுமார், கடந்த, ஜூலையில் நேரில் சென்று ஆய்வு செய்தபோது, இரண்டு ஆசிரியர்களும் பள்ளிக்கு வராதது தெரிந்தது. இதுகுறித்து, சி.இ.ஓ.,க்கு புகார் சென்றது. பலமுறை விளக்கம் கேட்டும் இரண்டு ஆசிரியர்களிடம் இருந்து சரியான பதில்கிடைக்கவில்லை. இதையடுத்து பள்ளிக்கு வராத இரண்டு ஆசிரியர்கள் சம்பளத்தையும், தற்காலிகமாக நிறுத்தி வைக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் உத்தரவிட்டார்.
உத்தரவை மதிப்பதில்லை:
கடந்த, ஐந்து மாதமாக இரண்டு ஆசிரியர்களும் சம்பளம் பெறவில்லை. இந்த பள்ளிக்கு வேறு ஆசியர்கள் பணிக்கு வர மறுப்பதால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். &'குறிப்பிட்ட இரண்டு ஆசிரியர்களும் உயர் அதிகாரிகள் உத்தரவை மதிப்பதும் இல்லை&' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, தலைமை ஆசிரியர் ஞானபிரகாசம் கூறுகையில், &'&'இப்பள்ளியில், நான்கு மாணவர்கள் இருந்தனர். அதில், இரண்டு பேர் பள்ளிக்கு வருவதில்லை. இதனால், உதவி ஆசிரியரை, வேறு பள்ளிக்கு மாற்றி விட்டனர். சில மாதங்களுக்கு முன், என் டூவீலர் பஞ்சர் ஆகிவிட்டதால், குறிப்பிட்ட நேரத்தில் என்னால் பள்ளிக்கு வரமுடியவில்லை. அன்றைய தினம் ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், என் சம்பளத்தை நிறுத்திவிட்டனர்,&'&' என்றார்.
விரைவில் நடவடிக்கை:
இதுகுறித்து, ஏ.இ.இ.ஓ., பிரபுகுமார் கூறியதாவது: குறிப்பிட்ட பள்ளியில் இரண்டு ஆசிரியர்களும் சரியாக பணிக்கு செல்லவில்லை என்பதால் தான், இப்பகுதி மாணவர்கள் உண்டு, உறைவிடப்பள்ளிக்கு சென்றுவிட்டனர். நான் மட்டுமல்ல, வட்டார வளர்ச்சி அலுவலரும் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ஊராட்சி தலைவரும் இது குறித்து புகார் தெரிவித்ததால், இரண்டு ஆசிரியர்களுக்கும் மெமோ கொடுத்தோம். ஆனால், அதற்கு எவ்வித விளக்கமும் அவர்கள் தரவில்லை. தற்போது, சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளோம். இப்போது கூட சரியாக பள்ளிக்கு செல்வதில்லை என்ற புகார் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, சி.இ.ஓ., கோபிதாஸ் கூறுகையில், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் எப்படி போடமுடியும். சம்பந்தப்பட்ட பள்ளியில் மீண்டும் ஆய்வு செய்து, அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Courtesy : Dinamalar
No comments:
Post a Comment