சுத்தம் இல்லாத சுண்டலை குழந்தைகளுக்கு வழங்குவதாக கூறி மாரியம்மன் கோவிலூரில் உள்ள உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போதக்காடு ஊராட்சியில் மாரியம்மன் கோவிலூர் கிராமம் உள்ளது. இங்கு பழங்குடியின உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 30 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர், வார்டன், சமையலர் மற்றும் உதவியாளர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சென்னா சுண்டல் முழுவதும் ஓட்டையாகவும் வண்டு மற்றும் புழுக்கள் இருந்துள்ளது. மாணவ-மாணவிகள் அந்த சுண்டலை வீட்டுக்கு எடுத்து சென்று பெற்றோர்களிடம் காட்டி உள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலை மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உண்டுஉறைவிட தொடக்கப்பள்ளிக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சு வார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த தனிதாசில்தார் செந்தில்அரசன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தலைமை ஆசிரியர் பள்ளிக்கு சரிவர வருவது இல்லை. குழந்தைகளை அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று காய்கறிகள் மற்றும் தக்காளி உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வருமாறு கூறுகின்றனர். சுகாதார வளாகம் தூய்மையாக இருப்பது இல்லை. வார்டன் மற்றும் சமையலர் பள்ளியில் தங்குவது இல்லை.
மேலும் சமையல் அறை தூய்மையாக இருப்பது இல்லை. குழந்தைகளுக்கு சுகாதாரமான உணவு சமைத்து கொடுப்பது இல்லை. குழந்தைகளுக்கு வழங்கப்படும் சுண்டலில் சுத்தம் இல்லாமல் ஓட்டை விழுந்துள்ளது. மேலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள சுண்டல்களில் வண்டுகள் மேய்கிறது என்று அவர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனிதாசில்தார் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment