தமிழக மழை - வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை (டிசம்பர் 3) அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் புதன்கிழமை பேசிய அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் தமிழக மழை - வெள்ளப் பாதிப்பை "தேசிய பேரிடர்' ஆக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இக்கோரிக்கைக்கு இரு அவைகளிலும் ஒருமனதாக ஆதரவு நிலை காணப்பட்டது.
இதையடுத்து, புதன்கிழமை பிற்பகலில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிக்கை அளிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக வெள்ளச் சேதங்கûள் முதல் கட்டமாகப் பார்வையிட்ட மத்திய குழு அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
அவகாசம் கோரல்: இதையடுத்து, மக்களவையில் உறுப்பினர்கள் பங்கேற்ற விவாதத்தின் முடிவில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, "தமிழக மழை - வெள்ளப் பாதிப்ப் தொடர்பாக மத்திய அரசு மிகுந்த கவலை கொண்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வருடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். தமிழக அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக சில விவரங்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேகரித்து வருகிறார்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர் வியாழக்கிழமை நண்பகலில் மக்களவையில் அறிக்கை அளிக்க அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
அவரது கோரிக்கையை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அவையை வழிநடத்திய மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை ஏற்றுக் கொண்டார்.
அமித்ஷாவுடன் ஆலோசனை: முன்னதாக, தமிழக மழை வெள்ள நிவாரணம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை அழைத்து ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
தமிழக மழை நிலவரம் தொடர்பாக மாநில பாஜகவினர் மூலம் கிடைத்த தகவல்களை தனக்கு வியாழக்கிழமை காலையில் அளிக்கும்படி அமித் ஷாவை ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
இதேபோல, பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை காலையில் சந்தித்தார். அப்போது, தமிழக மழை நிலவரம் குறித்து பிரதமரிடம் விளக்கிய ராதாகிருஷ்ணன், "மத்திய குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்காமல் தமிழக பாதிப்புகளுக்குத் தேவையான மனிதாபிமான, நிதியுதவிகளை உடனே வழங்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.
தில்லி அரசு ஆதரவு: தமிழக மழை, வெள்ளப் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தனது அரசின் மூலம் தேவைப்படும் அனைத்துவித உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயார்' என்று கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment