புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின் தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த திட்டத்தில் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை ஆணையத்தில் செலுத்தப்படவில்லை.
இதனால் 12 ஆண்டுகளில் தமிழகத்தில் ஓய்வு பெற்றோர், இறந்தோரின் குடும்பத்தினர் பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர். நெல்லை மாவட்டம் தென்காசி ஆனைகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி காவலாளியாக இருந்த குருசாமி 2012 ல் ஓய்வு பெற்றார். பலமுறை போராடியும் புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் பெறமுடியாமல் 2013 ல் இறந்தார். அதன்பின் அவரது மனைவி மாரியம்மாள் போராடியும் பணப்பலன் கிடைக்காமல் சமீபத்தில் இறந்தார்.
அவர்களது மகன் குமார் பணப்பலன் கேட்டு தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு செய்தார். அந்த மனுவிற்கான பதிலில், 'புதிய பென்ஷன் திட்டத்தில் ஓய்வூதியத்தொகை வழங்குவது குறித்து அரசாணை, தெளிவுரை எதுவும் இல்லை. இதுகுறித்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது,' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு ஊழியர்கள் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தில் பணத்தை மட்டும் பிடிக்கின்றனர். ஆனால் பணப்பலன் வழங்குவதில்லை. இதனால் இதுவரை ஓய்வு பெற்ற 1,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு சென்ற 6 பேருக்கு மட்டும் பிடித்த பணம் வழங்கப்பட்டு உள்ளது, என்றனர்.
1 comment:
Cps திட்டம் வேண்டாம்னு சொன்னோம். எவன் கேட்டான்.இன்னமும் சரி பண்ணவே மாட்டானுங்க.திருந்தாத ஜென்மங்கள்.
Post a Comment