திண்டுக்கல்லில் இடிந்து விழும் நிலையில் 20 பள்ளிக் கட்டடங்கள் உள்ளன.திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டத்தில் ஆயிரத்து 426 பள்ளிகள் உள்ளன. சமீபத்தில் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்கள், பள்ளி கட்டடங்கள் நிலை குறித்தும், பள்ளி மைதானங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
திண்டுக்கல் - பழநி கல்வி மாவட்ட பள்ளிகளில் திண்டுக்கல் சி.இ.ஓ., சுபாஷினி தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வில் ஈடுபட்டது.அதில் 1950ல் கட்டப்பட்டு சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் 20, 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடங்கள் உள்ளன என கண்டறிய பட்டது. அவற்றை புகைப்படம் எடுத்து சேத விபரங்களை கணக்கிட்டனர். பின், பள்ளிக் குழந்தைகளை பாதிக்கப்பட்ட இடங்களில் தங்கவைக்கக் கூடாது. பாதுகாப்பான இடங்களில் அமரவைத்து பாடங்கள் நடத்த வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தினர்.
முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வில், 20 பள்ளிகளில் கட்டடச்சுவர்கள் சேதமடைந்துள்ளன.
அவை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் அனுப்பியுள்ளோம். மாணவர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment