பி.எட்., எம்.எட். படிப்பு காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டிருப்பது, மாணவர் சேர்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 30 முதல் 40 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலின் படி, பி.எட்., எம்.எட். ஆகிய ஆசிரியர் கல்வியியல் படிப்புகளின் படிப்பு காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதலை எதிர்த்து தமிழக சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், படிப்பு காலம் ஓராண்டாக இருக்குமா அல்லது இரண்டு ஆண்டுகளாக இருக்குமா என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதனால், பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கை தாமதமாகி வந்தது.
இந்த நிலையில், தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், 2015-16-ஆம் கல்வியாண்டு முதல், இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கான பாடத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்தது. அதோடு, நிலுவையில் உள்ள வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவையும் பின்பற்ற வேண்டும் எனவும் அதில் தமிழக அரசு தெரிவித்தது.
மேலும், வழக்கு நிலுவையில் உள்ளபோதும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை தொடங்க அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கான முதலாமாண்டு பாடத் திட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
அதோடு, பி.எட்., எம்.எட். படிப்புகள் நிகழாண்டில் 2 ஆண்டுகள்தான் என அரசு கல்லூரிகளுக்கும், சுயநிதி கல்லூரிகளுக்கும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பி.எட். படிப்பு காலம் நிகழாண்டில் 2 ஆண்டுகள் என்பது உறுதியாகியுள்ளது. இந்தக் குழப்பம் காரணமாக நிகழாண்டில் மாணவர் சேர்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்க நிர்வாகி நடராஜன் கூறியது:
பி.எட். படிப்பு காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டிருப்பது மாணவர் சேர்க்கையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் 30 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, பிற மாநிலங்களில் உள்ள கல்லூரிகள் புதிய வழிகாட்டுதலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர் என்றார்.
இடங்களை ஒப்படைக்க முன் வந்த 5 கல்லூரிகள்: சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கையைத் தொடங்கி விட்டன. படிப்பு காலம் தொடர்பான குழப்பம் காரணமாக நிகழாண்டில் மாணவர்களிடையே வரவேற்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
இதன்காரணமாக, 5 சுயநிதி கல்லூரிகள் அரசு சார்பில் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வில் தங்களுடைய நிர்வாக பி.எட். இடங்களை ஒப்படைக்க கடிதம் அனுப்பியுள்ளன.ஆனால், இந்த இடங்களை கலந்தாய்வில் சேர்க்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து கலந்தாய்வு அதிகாரிகள் கூறியது:
கடந்த ஆண்டு பல்கலைக்கழகம் சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அப்போது பல்கலைக்கழகம் தனது அதிகாரத்தின் மூலம் தன்னிச்சையாக முடிவெடுத்து, சுயநிதி கல்லூரிகளின் எம்.எட். இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்தியது. ஆனால், இப்போது அரசு கல்லூரி சார்பில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்க முடியாது.
இதற்கென அரசு ஆணை பிறப்பித்து அனுமதி அளித்தால் மட்டுமே, சுயநிதி கல்லூரிகளின் பி.எட். இடங்களை கலந்தாய்வில் சேர்த்துக்கொள்ள முடியும் என்றனர்.
No comments:
Post a Comment