வெள்ளக்கோவில் அரசு பள்ளியில், மாணவர்களிடம் முறைகேடாக, இரண்டு லட்சம் ரூபாய் வரை வசூலித்த, பட்டதாரி ஆசிரியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,050 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் முருகேசன், மாணவர் சேர்க்கையின்போதும், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கியபோதும், பல்வேறு காரணங்களை கூறி, மாணவ, மாணவியரிடம் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதற்கு, அதே பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.
கடந்த, 2012 முதல், வங்கியில் மூன்று பேரும் கணக்கு துவங்கி, முறைகேடாக வசூலித்த பணத்தை சேமித்துள்ளனர்.இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் முருகனுக்கு புகார் வந்தது. நேரில் சென்று விசாரணை நடத்தியபோது, ஆசிரியர்களின் வங்கி கணக்கில் முறைகேடாக வசூலித்த வகையில், இரண்டு லட்சம் ரூபாய் வரை இருப்பது தெரிய வந்தது.
மற்ற இரு ஆசிரியர்களும், தங்களது தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. குற்றச்சாட்டை மறுத்த முருகேசனை, சஸ்பெண்ட் செய்து, முருகன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment