தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவி எம்.பூஜாலட்சுமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழக அரசு கடைபிடிக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 50 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்கி தகுதி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 2015-16-ம் கல்வி ஆண்டில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் முன்னிலையிலான அமர்வு முன்பு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சிவபாலமுருகன் தன்னுடைய வாதத்தில் சுப்ரீம் கோர்ட்டு மூலமாக 3 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கைக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையில் தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியை 2012-ம் ஆண்டில் இருந்து தமிழக அரசு ஏற்று நடத்த ஆணையிட்டது. அதனால் இந்த மருத்துவ கல்லூரியின் சேர்க்கையிலும் தமிழக அரசு செய்வது போல கோர்ட்டின் உத்தரவின் கீழ் 50 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி தன்னுடைய வாதத்தில், சுப்ரீம் கோர்ட்டு 50 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான அனுமதி வழங்க வேண்டும் என்று 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 4-ந் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த இடைக்கால உத்தரவை நிறைவேற்றும் வகையில் தகுதி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் அனுமதி வழங்கப்பட்டது. அதே போல, இந்த ஆண்டும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியில் அனுமதி வழங்குவதில் தமிழக அரசுக்கு ஆட்சேபம் இல்லை என்று கூறினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நந்தகுமார் தன்னுடைய வாதத்தில், கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் மனுதாரருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் இடம் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவை இந்த ஆண்டும் முழு அளவில் பின்பற்றி மனுதாரருக்கு மட்டுமின்றி தகுதி உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உடனடியாக அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
இதன்படி மாணவி பூஜாலட்சுமி உள்பட தகுதி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் சேர்க்கை பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment