மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க சமச்சீர் கல்வி காரணமா? என்பது குறித்த விவாதம் நடந்தது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர் திராவிட மணி (தி.மு.க.) பேசினார். அப்போது அவர், அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக ஒரு கருத்தை தெரிவித்தார். இதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் அளித்து கூறியதாவது:
கே.சி.வீரமணி:- உறுப்பினர் இங்கே தமிழகத்தில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக கூறுகிறார். சட்டசபைக்கு வெளியே அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல் ஆதாயத்திற்காக இதே தான் கூறி வருகிறார்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன், ஏதாவது ஒரு பள்ளி மூடப்பட்டு இருக்கிறதா? எதையும் ஆதாரத்துடன் கூறுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு தான் வருகிறது. 1,500 புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டதால் தான் இன்றைக்கு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது.
உறுப்பினர் திராவிடமணி (தி.மு.க.):- தி.மு.க. கொண்டு வந்த சமச்சீர் கல்வியால் தான் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது.
தேர்ச்சி விகிதம்
அமைச்சர் கே.சி.வீரமணி:- இது தவறானது. தமிழகத்தில் இன்றைக்கு தரமான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படுகிற விலையில்லா மடிக்கணினி, புவியியல் வரைப்படம், காலணிகள், சீருடைகள், கணித உபகரணங்கள், வண்ண பென்சில்கள், சிறப்பு ஊக்கத்தொகை, மிதிவண்டி, விலையில்லா பாடபுத்தகங்கள், இடை நிற்றலை தவிக்க கல்லூரிக்கு செல்லும் வகையில் ரூ.5 ஆயிரம் உதவி தொகை என்று இதுபோன்ற காரணங்களால் தான் மாணவர்கள் நல்ல தேர்ச்சியை பெற்று இருக்கிறார்கள்.
வைகைசெல்வன் (அ.தி.மு.க.):- முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆளுமை திறனால் தேசிய அளவிலான கல்வி வளர்ச்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்று இருக்கிறது. அடுத்த தலைமுறை மட்டுமல்ல, அடுத்தடுத்த தலைமுறைக்கும் சேர்த்து சிந்திப்பவர் நம்முடைய முதல்-அமைச்சர்.
25 சதவீத ஒதுக்கீடு
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை குறித்த உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய கே.சி.வீரமணி, ‘ஜூலை 31-ந்தேதி வரை இந்த திட்டத்தில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்’.
இவ்வாறு விவாதம் நடைப்பெற்றது.
No comments:
Post a Comment